Published : 26 Mar 2022 08:44 AM
Last Updated : 26 Mar 2022 08:44 AM
சென்னை: பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சாகசப் பயணம் மேற்கொண்ட மாணவர்களுக்கு போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
பேருந்து படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதன் ஆபத்து குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகாம்கள் நடத்துமாறு போலீஸாருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு காவல் துறை அதிகாரிகள் நேரில் சென்று, பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்வதன் ஆபத்து குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, வேப்பேரி காவல்நிலைய போலீஸார் நேற்று காலை சூளை பேருந்து நிறுத்தம், டவ்டன் சிக்னல், ஜெர்மையா ரோடு, ஏ.பி. ரோடு, அஷ்டபுஜம் ரோடு ஆகிய பேருந்து நிறுத்தங்களில் கண்காணித்து, மாநகரப் பேருந்துகளில் படிகளில் நின்று கொண்டும், தொங்கியபடியும் பயணம் செய்த பள்ளி மாணவர்களைப் பிடித்து, அறிவுரைகள் வழங்கினர்.
இதுபோன்ற ஆபத்தான பயணங்களால் உயிரிழப்பு, கை, கால் ஊனம் உள்ளிட்டவை நேரிடும். எனவே, பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்வது, ஓடிச்சென்று ஏறுவது போன்றவற்றைக் கைவிட்டு, கல்வியில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.
பெற்றோருக்கும் அறிவுறுத்தல்...
அதுமட்டுமின்றி, பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களின் பெற்றோரை வேப்பேரி காவல் நிலையத்துக்கு வரவழைத்து, இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் மேற்கொள்ளாதவாறு தங்களது பிள்ளைகளுக்கு அறிவுறுத்துமாறும், பிள்ளைகளைக் கண்காணிக்குமாறும் அறிவுரை வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT