Published : 28 Apr 2016 08:39 AM
Last Updated : 28 Apr 2016 08:39 AM

ஸ்டாலின், விஜயகாந்த், திருமாவளவன் வேட்புமனு தாக்கல்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலை வர் திருமாவளவன் காட்டுமன்னார் கோவிலிலும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நக ரிலும் திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரிலும் கடந்த 25-ம் தேதி மனு தாக்கல் செய்தனர். மனு தாக் கல் செய்ய நாளை (29-ம் தேதி) கடைசி நாளாகும். இதனால், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். பகல் 2.02 மணிக்கு அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை இணை ஆணை யரும், கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான எஸ்.பி.கார்த்தி காவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது மனுவை திமுக வழக்கறிஞர் அணிச் செயலாளர் இரா.கிரிராஜன் முன்மொழிந்தார்.

மனு தாக்கல் செய்ய வந்த ஸ்டாலி னுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பகல் 12 முதல் 1.30 மணி வரை ராகு காலம் என்பதால், நல்ல நேரமான பிற்பகல் 2 மணிக்கு பிறகு ஸ்டாலின் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடம் திறந்த ஜீப்பில் நின்றவாறு அவர் பேசியதாவது:

எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இல்லா விட்டாலும் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறேன். திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்களின் குறைகள் அனைத் தும் தீர்க்கப்படும்.

ஆனால், தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன். தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியி னரிடம் இருந்து ரூ.60 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடி பணத்தை அவர்கள் பதுக்கி வைத்துள்ளனர். ஜனநாயகத்தை பணநாயகத்தால் வெல்லப் பார்க்கி றார்கள். அதிமுகவினரின் இந்த திரு விளையாடல், திமுகவினரிடம் இந்த முறை பலிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

விஜயகாந்த்

உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டி யிடும் தேமுதிக தலைவர் விஜய காந்த், நேற்று உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனால் நேற்று உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். பிற் பகல் ஒன்றரை மணியளவில் பிரச்சார வேனில் தனது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷுடன் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட் சியருமான முகுந்தனிடம் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, அமர்ந்திருந்த நிலையில் உறுதி மொழி வாசித்தார். 20 நிமிடம் வரை அங்கு இருந்த விஜயகாந்த், பின்னர் புறப்பட்டார்.

திருமாவளவன்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் (தனி) சட்டபேரவைத் தொகுதி யில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சியின் தலைவர் திருமா வளவன் போட்டியிடுகிறார். காட்டு மன்னார்கோவில் வட்டாட்சியர் அலு வலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகுமரசாமியிடம் நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘15 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறேன். வெற்றி பெறுவேன். தமிழகம் முழு வதும் மக்கள் நலக் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். இரு சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டு துணிச்சலான முடிவை வைகோ எடுத் துள்ளார். அந்த முடிவு பாராட்டுக்கு உரியதாகும். சாராயக் கடைகளை தொடங்கி 25 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டியதுதான் ஜெயலலிதாவின் சாதனை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறாதவர். கடந்த 50 ஆண்டுகளில் திமுக, அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு இதுவரை எந்தவித முன்னேற்றமும் அடையவில்லை’’ என்றார்.

ஜவாஹிருல்லா

திமுக கூட்டணி சார்பில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, ராமநாதபுரம் தொகு தியில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராமநாதபுரம் வருவாய்க் கோட்டாட் சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ராம்பிரதீபனிடம் அவர் மனுதாக்கல் செய்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர் தலில், அதிமுக கூட்டணியில் இதே தொகுதியில் போட்டியிட்ட ஜவா ஹிருல்லா வெற்றிபெற்று எம்எல்ஏவாக இருந்தார்.

கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சித் தலைவர் க.கிருஷ்ணசாமி நேற்று ஓட்டப்பிடாரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திமுக கூட்டணி கட்சி தொண்டர்களு டன் ஊர்வலமாக வந்த அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகாமியிடம் தனது வேட்புமனுவை அளித்தார். தனது பெயரில் ரூ.8.50 கோடி மதிப் பிலான சொத்து இருப்பதாக குறிப் பிட்டுள்ளார். ‘கடந்த முறை தான் வாக்குறுதி அளித்த சில திட்டங்களை நிறைவேற்ற முடியாததற்கு அதிமுக அரசின் ஒத்துழைப்பு இல்லாததே காரணம்’ என்றார் அவர்.

இப்போது எதுக்கு உறுதிமொழி?

உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் வேட்புமனு தாக்கல் செய்து முடித்து உறுதிமொழி ஏற்ற பின்னர், வட்டாட்சியரை பார்த்து, ''வேட்புமனு தாக்கல் செய்யும்போதே உறுதி ஏற்கச் சொல்கிறீர்கள். பின்னர் வேட்புமனு பரிசீலனையின் சிலரது மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது. அல்லது சிலர் வாபஸ் பெற்று விடுகின்றனர். எனவே ஒரேடியாக வேட்புமனு பரிசீலனைக்குப்பின், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் வேட்பாளர்களிடம் உறுதி மொழி ஏற்கச் செய்யலாமே'' என்று வேண்டுகோள் வைத்தார். அருகில் அமர்ந்திருந்த பிரேமலதா ஏதோ கூறியதும், சிரித்துக்கொண்டே அமைதியானார் விஜயகாந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x