

பூந்தமல்லி: ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள போக்குவரத்து போலீஸாருக்கு, வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் தக்கை தொப்பி, குளிர் கண்ணாடி, குளிர் பானங்கள் வழங்க ஆவடி காவல் ஆணையரகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று திருவேற்காடு அருகேவேலப்பன்சாவடியில் போக்குவரத்து போலீஸாருக்கு தக்கை தொப்பி, குளிர் கண்ணாடி, குளிர் பானங்களை வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் போக்குவரத்து போலீஸார் மத்தியில் பேசியதாவது: ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குள் சென்னை மற்றும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களை இணைக்கும் உள்வட்டச் சாலை, வெளிவட்டச் சாலை, பைபாஸ் சாலைகள் என 3 முக்கிய சாலைகள் உள்ளன. போக்குவரத்துதான் சென்னை போலீஸின் இமேஜ் ஆக உள்ளது. சென்னை, ஆவடி, தாம்பரம் எல்லாமே சென்னை போலீஸ்தான். நாம் அனைவரும் ஒரே குடும்பம் போலச் செயல்பட வேண்டும்.
சாலைகள் சரியில்லாத நிலை,மெட்ரோ ரயில் பணி, மக்கள்தொகை பெருக்கம், வாகனங்களின்எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும், போக்குவரத்து போலீஸார் சிறப்பாகச் செயல்படுகின்றனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள். போக்குவரத்து போலீஸாரின் பணியைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி திருவேற்காடு நகராட்சி அலுவலகம் அருகே தொடங்கி, தேவி கருமாரியம்மன் கோயில் அருகே வரை நடைபெற்றது.
200 மாணவர்கள் பங்கேற்பு
ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்த இப்பேரணியில், 6 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்று, பொதுமக்களிடையே போதைப் பொருட்களை தடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வுகளில், போக்குவரத்து துணை ஆணையர் அசோக்குமார், ஆவடி போக்குவரத்து உதவி ஆணையர் ஜெயகரன் மற்றும் ஆவடி காவல் துணை ஆணையர் மகேஷ், எஸ்.ஆர்.எம்.சி., பூந்தமல்லி உதவி காவல் ஆணையர்கள் பழனி, முத்துவேல்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.