Published : 26 Mar 2022 06:44 AM
Last Updated : 26 Mar 2022 06:44 AM
திருவள்ளூர்: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அன்னம்பேடு ஊராட்சி செயலராகக் கடந்த 2010 ஜூன் 15-ம் தேதி பணி நியமனம் செய்யப்பட்டவர் சந்தன்ராஜ். அவர், நிர்வாக காரணங்களால் பணி மாறுதலில் கொசவன்பாளையம் ஊராட்சி செயலராகக் கடந்த 2015 பிப்ரவரி 10-ம் தேதி முதல், பணிபுரிந்து வந்தார்.
பிறகு சந்தன்ராஜ், கடந்த 2015 மே 8-ம் தேதி முதல் பணிக்கு வராமல் இருந்து வந்தார். தற்போது, அவர் ஜெ.தாட்சாயிணி என்றதிருநங்கையாக மாறியுள்ளார். இந்நிலையில் அவர், திருநங்கையாக மாறும் உணர்வுகளால் ஏற்பட்ட மனதடுமாற்றத்தால் பணிக்குச் செல்லாமல் நின்றுவிட்டதாகவும் மீண்டும் ஊராட்சி செயலர் பணியை தனக்கு வழங்குமாறும் அரசுக்கு விண்ணப்பித்திருந்தார்.
அதன் அடிப்படையில், பாலின மாறுபாடு காரணமாக உடல் ரீதியான மாற்றம் மற்றும் அதன் தொடர்பான இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில், தற்போது திருநங்கை ஜெ.தாட்சாயிணி, பணியிட மாறுதலில் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம்,கோடுவெளி ஊராட்சி செயலராக வட்டார மாறுதலில் மீண்டும் பணியமர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார்.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை தாட்சாயிணிக்கு கோடுவெளி ஊராட்சி செயலர் பணிக்கான ஆணையை, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, கரோனா தொற்றால் பெற்றோர்களில் ஒருவரை இழந்த 2 குழந்தைகளுக்கு கரோனா நிதியுதவி திட்டத்தில் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.6 லட்சத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சாவித்திரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தி, எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT