Published : 26 Mar 2022 06:23 AM
Last Updated : 26 Mar 2022 06:23 AM

குன்றத்தூர் கோயிலில் ஏப்.25-ல் கும்பாபிஷேகம்: பி.கே.சேகர்பாபு தகவல்

குன்றத்தூர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை நேற்று ஆய்வு மேற்கொண்ட அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன். உடன், சட்டப்பேரவை உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை மற்றும் அதிகாரிகள்.படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை: சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஏப்.25-ம் தேதி நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மாங்காடு அருகே உள்ள குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்து வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். இக்கோயிலில் நடந்து வரும் திருமண மண்டப பணிகள், பெரும்புதூரில் அறநிலையத் துறைக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் புதிதாக கடைகள் கட்டும் பணி குறித்தும் ஆய்வு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருப்பணிகள் ரூ.2 கோடியில் விரைவாக நடந்துவருகின்றன. இங்குள்ள குறுகியமலைப் பாதையை அகலப்படுத்துவது, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. ரூ.3.20 கோடியில் அமைக்கப்பட உள்ள திருமண மண்டப பணிகள் குறித்தும் ஆய்வு செய்தோம். திருப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, ஏப்.25-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும். மே மாதத்தில் சேக்கிழார் குருபூஜை அரசு விழாவாக நடக்க உள்ளதால், இங்கு உள்ள சேக்கிழார் மணிமண்டபத்தை சீரமைப்பது குறித்தும் ஆய்வு நடத்தினோம்.

பெரும்புதூர் திருநாகேஸ்வர சுவாமி கோயில் திருப்பணிகள் ரூ.1.20 கோடியில் நடக்க உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்று கடந்த 9 மாதங்களில் 94 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன. 80 தனியார் கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

1,500 கோயில்களில் திருப்பணி

தமிழகத்தில் 1,500 கோயில்களில் திருப்பணிகளை தொடங்கிகும்பாபிஷேகம் நடத்த முடிவுசெய்து, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதில் 560 கோயில்களுக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து, பணிகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் குடியிருக்கும் வாடகைதாரர்களிடம் இருந்து ரூ.500 கோடி வாடகை வசூலிக்க இலக்கு நிர்ணயித்து, இதுவரை ரூ.142 கோடி வாடகை வசூலிக்கப்பட்டுள்ளது. நிலுவை வைத்துள்ளவர்களிடம் வாடகை வசூலிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

சிதம்பரம் நடராஜர் கோயில்விவகாரம் குறித்து முதல்வரின்கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உண்மை நிலையை அறிய அறநிலையத் துறை இணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x