

சென்னை உயர் நீதிமன்றத்தில் சிஐஎஸ்எப் பாதுகாப்பை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக தேவை யான ஆணைகளை பிறப்பிப்பது தொடர்பாக வரும் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சிஐஎஸ்எப் பாதுகாப்பை தொடர்வது மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக நிதி ஒதுக் கீடு செய்து தேவையான அரசு ஆணைகளை பிறப்பிக்க உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கோரி யது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், உயர் நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் கலந்தாலோசித்து உரிய உத்தரவு பிறப்பிக்க ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பாக நடந்தது. அப்போது கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு சார்பில், உள்துறை கூடுதல் செயலாளர் செந்தாமரை பதில் மனு தாக்கல் செய்தார். அதில், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் விடுத்துள்ள சில கோரிக் கைகள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அது வரை காத்திருப்பதாகவும் கூறப் பட்டிருந்தது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதி மன்றத்தில் சிஐஎஸ்எப் பாதுகாப்புக் கான நிதி ஒதுக்கீடு வரும் மே 16-ம் தேதியோடு நிறைவடையும் நிலையில், இந்த பாதுகாப்பை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டனர்.
மேலும், சிஐஎஸ்எப் போலீ ஸாருக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும் இந்த பாதுகாப்பை தொடர்வது குறித்து தகுந்த ஆணைகளை பிறப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக வரும் ஏப்ரல் 20-ம் தேதி தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.