Published : 13 Apr 2016 01:53 PM
Last Updated : 13 Apr 2016 01:53 PM

மதுரை, திண்டுக்கல்லில் சீட் பெற திமுகவில் கடும் போட்டி

மதுரை, திண்டுக்கல் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட சீட் பெறுவதில் கட்சி நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.

மதுரை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. திமுக கூட்டணியில் திருமங்கலம், மதுரை வடக்கு தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயராமன், மதுரை வடக்கில் மதுரை நகர் காங்கிரஸ் தலைவர் அன்னபூர்ணா தங்கராஜ் போட்டியிட உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

திமுகவில் மதுரை மத்திய தொகுதியில் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் மகன் தியாகராஜன், மதுரை கிழக்கில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி, மேலூரில் கிழக்கு ஒன்றியச் செயலாளர் அ.பா.ரகுபதி, சோழவந்தானில் டாக்டர் தேன்மொழி, மேற்கில் நகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, தெற்கு தொகுதியில் நகர் வடக்கு மாவட்டச் செயலாளர் வி. வேலுச்சாமி, திருப்பரங்குன்றத்தில் சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறன், உசிலம்பட்டியில் எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டியன் அல்லது உக்கிரபாண்டி ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, மதுரை தெற்கில் கடைசி நேர மாறுதலுக்கும் வாய்ப்புள்ளதாகவும் நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் திமுக கூட்டணியில் வேடசந்தூர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆத்தூரில் தற்போது எம்எல் ஏவாக உள்ள திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரான இ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு தற்போதைய எம்எல்ஏ வான அர.சக்கரபாணி, பழநி தொகுதியில் கிழக்கு மாவட்டச்செயலாளர் பெ.செந்தில்குமார், நிலக்கோட்டை தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ முனியாண்டி மகன் அன்பழகன், நத்தம் தொகுதியில் விஜயன் அல்லது இத் தொகுதியில் ஆறு முறை எம்எல்ஏ வாக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏ ஆண்டிஅம்பலம் மகன் ஆண்டிஅம்பலம் ஆகி யோரில் ஒருவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

திண்டுக்கல் தொகுதிக்கு முன்னாள் நகராட்சித்தலைவர்கள் பஷீர்அகமது, நடராஜன் ஆகி யோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கட்சியினர் தெரிவிக்கின்றனர். எப்படியும் சீட் பெற்றுவிட வேண்டும் என்பதில், இந்த நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு போட்டியாக ஸ்டாலின்

இதுகுறித்து மதுரை மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர் கூறியது: வரும் ஏப்ரல் 15-ம் தேதி அருப்புக்கோட்டையில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார். இதற்குப் போட்டியாக மு.க.ஸ்டாலின் அன்று மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலூரில் துண்டு பிரசுரம் விநியோகித்து பிரச்சாரத்தை தொடங்கும் ஸ்டாலின் 3 மாவட்டங்களிலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேரில் சென்று முக்கிய இடங்களில் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x