Published : 12 Apr 2016 08:14 AM
Last Updated : 12 Apr 2016 08:14 AM

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி தேர்தல் யுத்தத்தில் வெற்றி பெறுவோம்: கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரத்தை தொடங்கினார் விஜயகாந்த்

தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியை ஆதரித்து கும்மிடிப்பூண்டியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: மதுரையில் கிரானைட் முறைகேடு நடந்துள்ளது என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிக்கை கொடுத்தும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அது தொடர்பான வழக்கில் பி.ஆர்.பி.யை விடுதலை செய்த மாஜிஸ்திரேட் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பி.ஆர்.பி.யை மட்டும் ஏன் உள்ளே தூக்கி போடல? அதில் உள் நோக்கம் இருக்கு. தமிழ்நாட்டிலேயே திருவள்ளூர் மாவட்டத்தில் தான் மணல் கொள்ளை அதிகமாக நடந்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவதாக கூறியுள்ளார். சந்தோஷம். அவர் 5 முறை முதலமைச்சராக இருந்தபோது ஏன்? மதுவிலக்கை கொண்டு வரவில்லை?.

ஜெயலலிதா, மதுவை படிப்படியாக குறைப்பேன் என்று சொல்கிறார். ஏன் படிப்படியாக குறைக்கவேண்டும்? ‘வாட்ஸ்- அப்’பில், கால்படி, அரைப்படி, முக்கால்படி, ஒரு படி என இப்படி படிப்படியாக குறைப்பார்களா? என விமர்சனம் செய்கிறார்கள். எந்த அளவுக்கு கிண்டல் செய்கிறார்களோ, அந்தளவுக்கு நாடு குட்டிச் சுவராக போய்விட்டது என்று அர்த்தம்.

உங்களுடன் லெட்டர் பேடு கட்சிகளெல்லாம் கூட்டணி வைத்துள்ளது. இன்று நாங்கள் 6 கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளோம், 50 வருடமாக மாறி மாறி திமுக, அதிமுக ஆட்சியமைத்து தமிழகத்தில் ஊழல் நிறைந்து விட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற ஒரே கொள்ளைக்காக ஒன்று சேர்ந்துள்ளோம்.

நேற்று எங்கள் யுத்தம் ஆரம்பித்துவிட்டது. இந்த தேர்தல் போரில் ஜெயிக்கப்போவது அவர்களா? நாமளா? என்பதை பார்க்கவேண்டும். நாமே நல்லவர்கள். அவர்கள் தீயவர்கள். இந்த யுத்தத்தில் யார் ஜெயிப்பார்கள் என்பது மக்கள் கையில்தான் உள்ளது. கண்டிப்பாக தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி இந்த தேர்தல் போரில் வெற்றி பெறும் என்று அவர் பேசினார்.

இந்த கூட்டத்துக்கு தேமுதிக மாவட்ட பொறுப்பாளர் ஆறுமுகம், மதிமுக மாவட்ட செயலாளர் டி.ஆர். ஆர். செங்குட்டுவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.எஸ். கண்ணன், தமாகா நிர்வாகிகள் உட்பட கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x