Published : 14 Apr 2016 09:35 AM
Last Updated : 14 Apr 2016 09:35 AM

மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்து காலூன்றிய 22 பேருக்கு திமுகவில் வாய்ப்பு: ஆதங்கப்படும் திமுக வட்டாரம்

திமுக வேட்பாளர் பட்டியலில் மக்கள் தேமுதிக நீங்கலாக மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் 22 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் பட்டியலில் மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்த பரிதி இளம்வழுதி, பண்ருட்டி ராமச் சந்திரன், கலையரசு, மாஃபா பாண்டியராஜன் ஆகிய நால்வருக்கு மட்டுமே தேர்தலில் சீட் வழங்கப் பட்டது. ஆனால், திமுகவில் மக்கள் தேமுதிகவையும் சேர்த்து மாற்றுக் கட்சியில் இருந்து வந்த 25 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஜனநாயக பேரவையில் இருந்து வந்த ப.ரெங்கநாதன், அதிமுகவில் இருந்து வந்த பி.கே.சேகர்பாபு, கு.க.செல்வம், ஈரோடு முத்துசாமி, திருமயம் எஸ்.ரகுபதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அதிமுகவில் இருந்து வந்த சேடப்பட்டி முத்தையாவின் மகன் மு.மணிமாறன், சமயநல்லூர் செல்வராஜின் மகள் மானாமதுரை சித்திராச்செல்வி, ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை, மதிமுகவில் இருந்து வந்த மு.கண்ணப்பனின் மகன் மு.க.முத்து, பார்வர்டு பிளாக்கில் இருந்து வந்த (ஆண்டி அம்பலத்தின் அண்ணன் மகன்) மேலூர் அ.பா.ரகுபதி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாக்கியராஜ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து திமுகவில் இணைந்த எ.வ.வேலு, அண்மையில் இணைந்த மதிமுக மாநில பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, மதிமுக முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, கரூர் மாவட்ட மதிமுக முன்னாள் செயலாளர் கே.சி.பழனிச்சாமி, அதே கட்சியில் இருந்து வந்த கம்பம் நா.ராமகிருஷ்ணன், டி.பி.எம்.மைதீன்கான், மாதவரம் சுதர்சனம் ஆகியோருக்கும் சீட் தரப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர, கடந்த 2001-ல் புதிய நீதிக்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், காங்கிரஸில் இருந்து வந்த விராலிமலை எம்.பழனியப்பன், ராதாபுரம் மு.அப்பாவு, நமக்கு நாமே பயணத்தின்போது கட்சியில் இணைந்த மதுரை தெற்கு எம்.பாலச்சந்திரன், தேமுதிகவில் இருந்து வந்த எஸ்.ஆஸ்டின், ஜனதாதளத்தில் இருந்து வந்த பத்மநாபபுரம் மனோ தங்கராஜ் ஆகியோரும் திமுக வேட்பாளர் பட்டியலில் இடம பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியல் குறித்துப் பேசிய தென்மாவட்ட திமுக நிர்வாகிகள், ‘‘வந்தாரை வாழவைக்கும் திமுக, தலைமுறை தலைமுறையா கட்சியே கதி என கிடக்கும் உண்மை தொண்டர்களை உதாசீனப்படுத்துகிறது. கருணாநிதிக்கு அருகில் இன்றைக்கும் பரம்பரை திமுகவினர்தான் இருக்கிறார்கள். ஆனால், ஸ்டாலினைச் சுற்றி மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்கள்தான் இருக்கிறார்கள். மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்கள் வெற்றி பெற்றால் உள்ளாட்சித் தேர்தலில் அவர்களைச் சார்ந்தவர்களைத்தான் கைதூக்கி விடுவார்கள். நாங்கள் காலத்துக்கும் மாற்றுக் கட்சியினரோடு மல்லுக்கட்டிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்’’ என்றார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x