

தஞ்சாவூர்: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று காலை தொடங்கிய விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் தொடங்கிய இக்கூட்டத்தில், மேகதாது அணையைக் கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, கர்நாடக அரசைக் கண்டித்தும், அதற்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பியவாறு விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் ஆட்சியரக கட்டிடம் முன் விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பி கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு விவசாயிகள் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.