Published : 25 Mar 2022 06:25 AM
Last Updated : 25 Mar 2022 06:25 AM
சென்னை: கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக ரூ.10,567 கோடி மதிப்பிலான இறுதி துணை பட்ஜெட்டை பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2021-22 நிதியாண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் பேசியதாவது:
இந்த இறுதி துணை பட்ஜெட்டானது, மொத்தம் ரூ.10,567.01 கோடி நிதி ஒதுக்கத்துக்கு வழி செய்கிறது. இதில் ரூ.8,908.29 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.1,658.72 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.
கடந்த ஜனவரி 7-ம் தேதி 2021-22 ஆண்டுக்கான முதல் துணை பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு புதிய பணிகள், துணைப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட செலவுகளுக்கு பேரவையின் ஒப்புதல் பெறுவது இந்த அறிக்கையின் நோக்கமாகும்.
கூடுதல் நிதி ஒதுக்கம்
கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,215.58 கோடி, ஊரக வளர்ச்சித் துறையின்கீழ் 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி கிராம ஊராட்சிகளுக்கு அடிப்படை, செயல்திறன் மானியமாக ரூ.1,140.31 கோடி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ.948.58 கோடி, போக்குவரத்துத் துறையில் மகளிருக்கு இலவசப் பேருந்து பயணத்துக்கு ரூ.546.83 கோடி. கரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத் தவும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு உதவித்தொகை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காகவும் இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு துறைக்கு ரூ.333.55 கோடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக ரூ.212.92 கோடி நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து, கூடுதல் செலவுக்கான இறுதி துணை பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு மூலம் பேரவையின் ஒப்புதல் பெறப் பட்டது.
அமைச்சர் பதிலுரை
இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, சென்னை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என்றார். திட்டத்துக்கு ரூ.3,050 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காக ரூ.1902.71 கோடி ஒதுக்கப்பட்டு, 93 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் இத்திட்டம் நிறைவடையும். ஏழைகளுக்கு அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லை என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் குறிப்பிட்டிருந்தார். பழங்குடியினருக்கு 1000 புதிய வீடுகள் கட்ட ரூ.50 கோடி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊரகத்துக்கு ரூ.4,848 கோடி, நகரத்துக்கு ரூ.3,700 கோடி, முதியோர், விதவைகள் ஓய்வூதிய திட்டத்துக்கு ரூ.4,816 கோடி, 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.2,800 கோடி, உணவு மானியம் ரூ.7,500 கோடி, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.450 கோடி என இவையெல்லாம் ஏழைகளுக்கான திட்டங்கள்தான்.
எங்களை பொறுத்தவரை கொள்கை அடிப்படையில்தான் அரசியல் செய்கிறோம். பல்வேறு கருத்துகளை உள்வாங்கி பணிகளை மேற்கொள்கிறோம். தெளிவான தொலைநோக்குப் பார்வையை முதல்வர் கொடுத்துள்ளார். முன்மாதிரி மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும். தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் தமிழகம் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதற்கு அதிகமான முதலீடுகள், வளர்ச்சி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை உருவாக்குவது முக்கியமான பணியாகும். நாம் ஏழை மாநிலம் இல்லை; வளர்ந்த மாநிலம். இளைஞர்களுக்கு ரேசன் அரிசி உணவும், இலவச பேருந்து பாஸ் போதாது. வாழ்க்கை முறை முன்னேற வேண்டும் என எதிர்பார்க் கின்றனர்.
தனியாக வாழும் முதியோருக்கு மருத்துவம், நிதி, உணவு உள்ளிட்டவை வழங்க வேண்டும். மாவட்டங்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைக்க வேண்டும். முதியோர் ஓய்வூதியம் ஆதரவற்றவர்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப் படும் சட்டங்கள், ஆளுநர், மத்திய அரசு, குடியரசுத் தலைவரிடம் போய் நிற்கிறது. இதுவரை நிறைவேற்றப் பட்ட 19 சட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளன. அப்படி யானால், எதற்காக சட்டப்பேரவை உள்ளது.
வருவாய் சரிவு
பெரிய அளவில் வருவாய் சரிவை நாம் சந்தித்து வருகிறோம். தற்போது வருவாய் என்பது உற்பத்தி மதிப்பில் 6 சதவீதமாக உள்ளது. எந்த வரியையும், கட்டணத்தையும் மாற்றாமல் இருந்தால் பிரச்சினை ஏற்படும். மாநிலத்தைபோல் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உரிமை தேவை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். பயனாளிகளுக்கு எந்த துறை நன்மை செய்யும், எப்படி ஒருங்கிணைந்த இடத்தில் பயன் கிடைக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். நிதித்துறையில் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
கடன், அதற்கான வட்டியை குறைப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும். பணம் பெறுவதற்கும் கடன் கொடுப்பதற்கும் உள்ள பல்வேறு அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் தேவையா என்பது ஆய்வு செய்யப்படும். வணிகவரியில் சிறப்பாக செயல்பட 2 ஐஆர்எஸ் அதிகாரிகளை நியமிக்க முயற்சி எடுத்துள்ளோம். டாஸ்மாக் நிறுவனத்தில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்.
சுற்றுச்சூழலை பாதிக்காத ஒருங் கிணைந்த சுரங்கக் கொள்கை உருவாக்கப்படும். சிறப்பான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது, தவறு செய்பவர்களை கையாள புது சட்டங்களை உருவாக்குவது ஆகியவை சுரங்கத் துறையில் மேற்கொள்ளப் படும்.
மேலும், பல ஆண்டுகளாக வரி, கட்டணங்களை மாற்றாமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தும். இதை ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தின் எதிர்காலம் ஒளிமயமாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT