சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை பிணையில் எடுக்க நடவடிக்கை

தனுஷ்கோடி அருகே மணல் தீடையில் தியோரி மற்றும் குழந்தைகள் எஸ்தர், மோசஸ்.
தனுஷ்கோடி அருகே மணல் தீடையில் தியோரி மற்றும் குழந்தைகள் எஸ்தர், மோசஸ்.
Updated on
2 min read

ராமேசுவரம்: இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத்தொட்டு வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வரத் தொடங்கி உள்ளனர். கடந்த 22-ம் தேதி அதிகாலை யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதியில் இருந்து தலா 3 பேர் என மொத்தம் 6 பேர் கொண்ட 2 குடும்பத்தினர் அகதிகளாக ஒரே படகில் தனுஷ்கோடி அருகே உள்ள நான்காம் மணல் தீடை பகுதியில் வந்திறங்கினர். தொடர்ந்து அன்று இரவு வவுனியாவிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த10 பேர் ஒரு பைபர் படகில் தனுஷ்கோடி வந்தனர்.

உயிரை பணயம் வைத்து பயணம்

இந்த 10 பேரும் தலைமன்னாரில் இருந்து கடந்த 21-ம் தேதி அதிகாலை புறப்பட்டனர். நடுக்கடலில் படகின் இன்ஜினில் ஏற்பட்ட பழுதால் உணவு, தண்ணீரின்றி சுமார் ஒன்றரை நாட்களாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். பின்னர் இன்ஜினை சரிசெய்து தனுஷ்கோடியின் வடக்கு மீன்பிடி இறங்குதளத்தில் கடந்த 22-ம் தேதி இரவு வந்து இறங்கியதாக அதிகாரிகளின் விசாரணையில் தெரிவித்தனர்.

இதில், தனுஷ்கோடி நான்காம் மணல் தீடையில் வந்திறங்கிய 6 பேரை, மண்டபம் மெரைன் போலீஸார் பாஸ்போர்ட் தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று ராமேசுவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஏப்.6 வரை நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வவுனியாவிலிருந்து வந்த 10 அகதிகளை தற்காலிகமாக மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

இலங்கையில் 1983-ல் உள்நாட்டுபோர் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் 2012-ம் ஆண்டின் இறுதியில் இருந்து இலங்கையில் இருந்து அகதிகளாக வருபவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பாஸ்போர்ட் ஆவணச் சட்டத்தின் கீழும், சட்டவிரோதமாக வந்ததாகவும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.

தனுஷ்கோடியில் வந்திறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள்.
தனுஷ்கோடியில் வந்திறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள்.

தமிழக முகாம்களில் உள்ள அகதிகளின் குடும்பத் தலைவருக்கு மாதம் ரூ.1,500-ம், 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000-ம், 12 வயதுக்குகீழ் உள்ளவர்களுக்கு ரூ.500-ம் என உதவித் தொகையும், வருடாந்திர கல்வி உதவி, வீடு, மின்சாரம், குடும்பத்துக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசியும், மானிய விலையில் அத்தியாவசிய பொருட்கள் நியாயவிலை கடைகள் மூலமும் வழங்கப்படுகின்றன. இவர்கள் முகாமுக்கு வெளியே கூலி வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் அகதிகளின் குடியுரிமைக்கோரிக்கைகள் கருணையுடன் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனாலும் 2019-ம்ஆண்டின் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில்இருந்து வந்த சிறுபான்மையினரைப் போல இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது வருத்தமான உண்மை.

இந்நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் "இலங்கை தமிழர்கள் தமிழகத்துக்கு வந்துகொண்டிருப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதோடு, மத்திய அரசிடமும் பேசிக் கொண்டிருக்கின்றோம். அதற்கொரு விடிவுகாலத்தை இந்த தமிழக அரசு ஏற்படுத்தி தரும்" என்று தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தமிழக அரசு, அகதிகளை மனிதாபிமானத்துடன் நடத்துமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ள அகதிகளை பிணை எடுக்கும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in