

விருதுநகர்: விருதுநகரில் இளம் பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி அதிகாரிகளிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து விசாரணையை சிபிசிஐடி அதிகாரிகள் தொடங்கினர்.
விருதுநகரில் 22 வயது இளம் பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் பால் வியாபாரி ஹரிஹரன்(27), அவரது நண்பர்கள் ரைஸ் மில் உரிமையாளர் மகனும்திமுக இளைஞர் அணி வார்டு அமைப்பாளருமன ஜூனத் அகமது(27), முத்தால் நகரைச் சேர்ந்த மாடசாமி(37), ரோசல்பட்டியைச் சேர்ந்த பிரவீன்(26) ஆகியோரும், பள்ளி மாணவர்கள் 4 பேரும் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ஹரிஹரன் உட்பட 4 பேரும் வில்லிபுத்தூர் கிளைச் சிறையிலும், சிறுவர்கள் 4 பேரும் ராமநாதபுரத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டுனர்.
இவர்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்தது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக விருதுநகர் டிஎஸ்பி அர்ச்சனா நியமிக்கப்பட்டார்.
சிறையில் உள்ள ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும், இந்த 4 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 23-ம் தேதி சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுஉள்ளது. இந்த வழக்கில் சிறப்பு அதிகாரியாக சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று தெரிவித்தார்.
முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு நேற்று மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த டிஎஸ்பி அர்ச்சனாவிடம் சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு அதிகாரியான டிஎஸ்பி வினோதினி ஆகியோர் வழக்கு குறித்து நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அனைத்து கோப்புகள், ஆவணங்கள் அனைத்தையும் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு அதிகாரியான டிஎஸ்பி வினோதினியிடம் விருதுநகர் டிஎஸ்பி அர்ச்சனா ஒப்படைத்தார்.
அதைத் தொடர்ந்து சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி நேற்று விருதுநகர் வந்து, சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பிக்கள் சரவணன், வினோதினி, இன்ஸ்பெக்டர் சாவித்திரி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.