Published : 25 Mar 2022 09:02 AM
Last Updated : 25 Mar 2022 09:02 AM
சென்னை: சென்னை தண்டையார்பேட்டை அரசு தொற்றுநோய் மருத்துவமனையில், ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் மையத்தை அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்துவைத்தார்.
இந்த மருத்துவமனையில் நேற்று காசநோய் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது. இதில், காச நோய்க்கான சிறப்பு சிகிச்சை வார்டு மற்றும் தனியார் அமைப்பால் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் மையம் ஆகியவற்றை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்துவைத்தார்.
தொடர்ந்து அமைச்சர் பேசும்போது, "கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டாலும், கரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ஏற்கெனவே முதல்வர் தெரிவித்துள்ளார். எனவே, அனைவரும் அதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
தற்போது இங்கு வந்திருக்கும் பலரும் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றனர். நோய் பரவலைத் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிந்தும், கைகளைக் கழுவி பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்" என்றார்.
சென்னை மேயர் ஆர்.பிரியா பேசும்போது, "சென்னை மாநகராட்சியில் 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 36 காசநோய் அலகுகளுடன் செயல்பட்டு வருகின்றன. 2021-ல் 17,174 பேருக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 9,092 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சை வழங்கப்படுகிறது.
இதேபோல, தனியார் மருத்துவமனைகளில் 4,348 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ளது. மாநகராட்சியின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காசநோய் பரிசோதனை வசதி உள்ளது. காசநோய் உள்ளவர்களுக்கு 6 மாதம் முதல் 18 மாதம் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருந்துகளுக்கான செலவுகளை அரசே ஏற்கிறது. காசநோயாளிகளின் சிகிச்சை காலத்தில் மாதம் ரூ.500 உதவித்தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு வாரங்கள் தொடர்ந்து இருமல், காய்ச்சல் மற்றும் சளியில் இரத்தம் இருந்தால், உடனடியாக காசநோய் பரிசோதனை செய்ய வேண்டும்.
காசநோயானது குணப்படுத்தக்கூடியது. எனவே, பொதுமக்கள் சரியான நேரத்தில் பரிசோதனை மேற்கொண்டு, காசநோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதற்காக மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்றார்.
கரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT