

மறைமலை நகர்: மறைமலை நகரில் ரூ.1 கோடியே 6 லட்சம் சொத்துவரி செலுத்தாததால் பிஎஸ்என்எல் பயிற்சி மையத்துக்கு ‘சீல்’ வைத்து மூட நகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறைமலை நகர் நகராட்சியில் பல்வேறு வரிகள் செலுத்தப்படாமல் நிலுவையாக ரூ.9 கோடிஅளவிற்கு உள்ளது. இந்த தொகையை வசூலிக்கச் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். மேலும் வாடகை பாக்கி செலுத்தப்படாத கடைகளுக்கு ‘சீல்’ வைத்து ஜப்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மறைமலை நகர் தொழிற்பேட்டையில் மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பயிற்சி மையம் சுமார் 18 ஏக்கரில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்துக்குக் கடந்த 2016-17-ம் ஆண்டு முதல் 2021-22-ம் ஆண்டு வரை செலுத்த வேண்டிய சொத்துவரி ரூ.1 கோடியே 6 லட்சத்து 72 ஆயிரத்து 140 நகராட்சிக்குச் செலுத்தாமல் நிலுவை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலுவை வரியைச் செலுத்தக் கோரி பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு நகராட்சி ஆணையர் லஷ்மி கடிதம் அனுப்பியிருந்தார்.
கடிதம் அனுப்பிய பின்பும் செலுத்தப்படாததால், 'அலுவலகத்தை ஜப்தி செய்ய நேரிடும்'என எச்சரிக்கை நோட்டீஸும் விடப்பட்டுள்ளது. அதன் பின்பும் பிஎஸ்என்எல் நிர்வாகம் சொத்துவரியைச் செலுத்தவில்லை. இந்நிலையில் மறைமலை நகர் நகராட்சி கணக்கர் பால முருகன், சுகாதார ஆய்வாளர் சிவமுருகன் தலைமையில் அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் நேற்று பிஎஸ்என்எல் அலுவலகத்துக்குச் சென்றனர்.
அங்கிருந்த துணை கோட்ட பொறியாளர் ஆர்.பாஸ்கரிடம் அலுவலகத்தை மூடி ‘சீல்’ வைப்பதாகக் கூறினர். அப்போது, "உயர் அதிகாரிகளிடம் வரி செலுத்துவது தொடர்பாகக் கோப்பு அனுப்பியுள்ளோம். விரைவில் வரி செலுத்தப்படும்" என்று கூறி கால அவகாசம் கேட்டார். அவகாசம் வழங்கிய அதிகாரிகள் விரைந்து வரி செலுத்தவில்லையெனில் 'சீல்' வைக்க நேரிடும் என எச்சரித்தனர்.