Published : 25 Mar 2022 06:39 AM
Last Updated : 25 Mar 2022 06:39 AM

இளநிலை பட்டப்படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு; ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை தடுக்கும் செயல்: பொன்முடி குற்றச்சாட்டு

சென்னை: இளநிலை பட்டப் படிப்புக்கு தேசியஅளவில் பொது நுழைவுத்தேர்வு என்ற அறிவிப்பு, ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை தடுக்கும் செயல் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு, மார்ச் 21-ம் தேதிஅன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) நிதியுதவியைப் பெறும்அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் கல்வி ஆண்டு (2022-2023) முதல் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத்தேர்வை மாநிலபல்கலைக்கழகங்கள், தனியார்மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் ஏற்கலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமமான வாய்ப்பை அளிக்காது

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் (என்சிஇஆர்டி) பாட முறையிலான இத்தேர்வு, மாநிலப் பாட முறையில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சமமான வாய்ப்பை அளிக்காது. இதனால், தமிழக மாணவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

இதுவரை பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்கள் மீது நுழைவுத் தேர்வை திணித்து தேவையற்ற பொருளாதாரச் சுமையையும், மன அழுத்தத்தையும் ஏற்றும் வகையில் அமைந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை தமிழக அரசு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏழை, நடுத்தர மாணவர்கள், சமூக ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் நலனை அச்சுறுத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, நீட் தேர்வு போன்றே தவறான நடைமுறையாகும்.

இந்த நுழைவுத் தேர்வால், டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கை பெருமளவில் குறையும் அபாயம் உள்ளது. மேலும், ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு என்கிற முறையில் நடத்த இருக்கின்ற இத் தேர்வு, பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் படிக்கும் மணவர்களின் நலனுக்கு எதிரானது.

பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல், பொது நுழைவுத்தேர்வு மூலம்மாணவர்கள் இளநிலை படிப்புகளில் சேர முடியும் என்றால் அதனால் பயன்பெறப் போவது தனியார் பயிற்சி மையங்கள்தான்.

ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை சீராக பள்ளிக் கல்வியை மேற்கொள்ளும் சிறந்த கல்விச் சூழலை இது சீர்குலைக்கும். ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை தடுக்கும் செயல் இது. இதை வன்மையாக எதிர்க்க வேண்டும்.

தன்னிச்சையான முடிவு

பொதுப்பட்டியலில் கல்வி இடம்பெற்றுள்ள நிலையில், புதிதாக கல்விக் கொள்கைகளை வகுக்கும்போதும், அதை நடைமுறைப்படுத்தும்போதும், மாநில அரசின் நிலை மற்றும் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது ஏற்கத்தக்கது அல்ல. இது மாநில அரசின் கல்விக்கான உரிமையில் தலையிடும் நடவடிக்கை. எனவே, பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை, தமிழக மாணவர்களின் உயர்கல்வி பெறும் உரிமையை கடுமையாக பாதிப்படையச் செய்யும் என்பதால், பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x