Published : 25 Mar 2022 06:38 AM
Last Updated : 25 Mar 2022 06:38 AM

தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே பாக் ஜலசந்தி கடல் பகுதியை நீந்தி கடந்து பெங்களூரு பெண் சாதனை

பாக் ஜலசந்தி கடல் பகுதியில் நீந்திய சுஜேத்தா. (வலது) பாக் ஜலசந்தி கடல் பகுதியை நீந்தி சாதனை படைத்த சுஜேத்தாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராமேசுவரம்: தனுஷ்கோடியிலிருந்து இலங்கை யின் தலைமன்னாருக்கு இடையேயான பாக் ஜலசந்தி கடல் பகுதியை 10 மணி நேரம் 9 நிமிடங்களில் நீந்தி கடந்து பெங்களூருவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை சுஜேத்தா சாதனை படைத்தார்.

பாக் ஜலசந்தி கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். இதுவரை 16 பேர் பாக் ஜலசந் தியை நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியா வின் தனுஷ்கோடிக்கோ அல் லது தனுஷ்கோடியிலிருந்து தலை மன்னாருக்கோ நீந்திச் சென்ற வர்கள்.

ஆனால், ஓரிடத்திலிருந்து புறப்பட்டு மறுபுறத்தை அடைந்த பின்பு தொடர்ச்சியாக மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு தொடங்கிய இடத்துக்கே வந்து சாதனை புரிந்தவர்கள் 2 பேர் மட்டுமே. அதில் ஒருவர், இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் வல் வெட்டித்துறையைச் சேர்ந்த வி.எஸ்.குமார் ஆனந்தன். இவர் 1971-ம் ஆண்டு தலைமன்னாரிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் தலைமன்னாருக்கு நீந்திச் சென்றார். மொத்தம் 60 கி.மீ. தூரத்தை 51 மணி நேரத்தில் நீந்தி கடந்தார். அதன் பின்பு இதே சாதனையை 11.4.2021-ல் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ரோஷான் அபேசுந்தர 28 மணி நேரத்தில் நிகழ்த்தினார்.

இந்நிலையில் இருபுறமும் நீந்திக் கடக்கும் சாதனையை மேற்கொள்ள பெங்களூருவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை சுஜேத்தா (37) இந்திய வெளியுறவுத் துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் அனு மதி கோரியிருந்தார். இவர், 2019-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் எலைட் மாரத்தான் நீச்சல் போட்டியில் பங்கேற்று 81 கி.மீ. தூரத்தை கடந்த முதல் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமையை பெற்றவர். மும்பையின் வொர்லி முதல் கேட் வே ஆப் இந்தியா வரையிலான 36 கி.மீ. தூர கடல் பகுதியை 8 மணி நேரம் 45 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இவருக்கு தனுஷ்கோடி யிலிருந்து தலைமன்னார் சென்று மீண்டும் தனுஷ்கோடி திரும்புவதற்கு இந்திய, இலங்கை அரசுகளின் அனுமதி அண்மையில் கிடைத்தது. இதையடுத்து புதன்கிழமை (மார்ச் 23) காலை 8.23 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனையிலிருந்து நீந்த தொடங்கி 10 மணி 9 நிமிடங்களில் அன்று மாலை 6.33 மணியளவில் இலங்கையின் தலைமன்னாரை அடைந்தார்.

தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் தனுஷ்கோடி நோக்கி நீந்தத் தொடங்கினார். அப்போது, அப்பகுதியில் மீனவர்கள் படகு களில் மீன்பிடித்துக் கொண்டி ருந்ததால் சுஜேத்தாவுக்கு நீந்தி வருவதில் சிரமம் ஏற்பட்டது. எனினும் விடாமுயற்சியாக நீச்சல் அடித்துக் கொண்டு வரும்போது வியாழக்கிழமை அதிகாலை 2.09 மணியளவில் ஜெல்லி மீன்கள் கடித்ததால் பாதிக்கப்பட்டார். அதன் பின் நீச்சலை முடித்துக் கொண்டு உடனடியாக படகில் தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்தார்.

இம்முறை இருபுறமும் நீந்திச் செல்லும் சாதனையை நிகழ்த்த முடியவில்லை. எனினும், தனுஷ்கோடியிலிருந்து தலை மன்னாருக்கு ஒருமுறை நீந்திச் சென்றவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இது குறித்து சுஜேத்தா கூறிய தாவது: ஜெல்லி மீன்கள் கடித் ததால் முழுமையான இலக்கை அடைய முடியவில்லை. எனினும், பாக் ஜலசந்தி கடல் பகுதியை ஒருபுறமாக கடந்தது மகிழ்ச்சி யளிக்கிறது. மீண்டும் இரு நாடுகளின் அனுமதியையும் பெற்று தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் சென்று மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி வருவதற்கு முயற்சி செய்வேன். மீனவர்கள் கடலுக்குச் செல்லாத நாட்களில் நீந்துவதற்கு அதிகாரிகள் அனுமதி தர வேண்டும் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x