ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளரை மாற்றக் கோரி திருவோடு ஏந்தி போராட்டம்

ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளரை மாற்றக் கோரி திருவோடு ஏந்தி போராட்டம்
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளரை மாற்றக் கோரி, அக்கட்சியினர் குளமங்கலத்தில் திருவோடு ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் ஜி.சதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக திமுக ஒன்றியச் செயலாளரும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவருமான சிவ.வீ. மெய்யநாதனை வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள் மே 14-ம் தேதி ஆலங்குடியில் திமுக கரை வேட்டிகளை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாள்தோறும் கீரமங்கலம், கொத்தமங்கலம், திருவரங்குளம், வடகாடு போன்ற இடங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், குளமங்கலத்தில் திமுக கிளைச் செயலாளர் பாண்டிக்குடி சேகர் தலைமையில் அக்கட்சியினர் நேற்று திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், குளமங்கலம், பனங்குளம், பாண்டிக்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த திமுகவினர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து வேட்பாளர் டாக்டர் ஜி.சதீஷ் கூறும்போது, “மெய்யநாதன் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்துள்ளார். தற்போது அவருக்கு கிடைக்காததால் அவரது உறவினர்கள் ஆங்காங்கே எனக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கட்சி நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்த போராட்டத்தால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனினும், மெய்யநாதனிடம் கட்சியின் தலைமை பேசியுள்ளது. நாங்களும் அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் அவர் சமாதானம் அடைந்துவிடுவார். எனக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in