

தமாகாவுக்கு எந்த பலவீனமும் கிடையாது. தமாகா தொடர்ந்து வலிமையுடன் திகழும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் தமாகா அலுவலகத்தில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''ஒரு சில தனி நபர்கள் தமாகாவில் இருந்து விலகுகின்றனர். அதற்கு யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியும். சில பேர் தமாகாவில் இருந்து விலகுவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
தமாகாவுக்கு எந்த பலவீனமும் கிடையாது. தமாகா தொடர்ந்து வலிமையுடன் திகழும்.
புதிய வாக்காளர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் எங்கள் கூட்டணி உள்ளது. எங்கள் கூட்டணியை உடைக்கும் முயற்சியில் சதி செய்தால் அது நிறைவேறாது.
அருந்ததியர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் வலசை ரவிச்சந்திரன் தமாகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி வெற்றிக்காக இயக்க நண்பர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஓரிரு நாட்களில் தமாகா போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும். 4, 5 நாட்களுக்குள் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்'' என்று வாசன் கூறியுள்ளார்.