Published : 25 Mar 2022 06:53 AM
Last Updated : 25 Mar 2022 06:53 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் புதிய முயற்சியாக நன்கொடையாளர்கள் மூலம் கிளை நூலங்களுக்கு புத்தகங்களை வழங்க, புத்தகப்பாலம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தி லுள்ள கிளை நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களை ஆர்வமுள்ள நன்கொடையாளர்கள் மூலம் விற்பனையார்களிடமிருந்து வாங்கும் ‘புத்தகப் பாலம்’ என்ற புதிய முயற்சியை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் அறிமுகப் படுத்தியுள்ளது. மாவட்டத்தில் பொதுநூலகத்துறை சார்பில் இயங்கும் 94 அரசு கிளை நூலகங்களுக்கும் தேவையான, குழந்தைகளுக்கான கதை புத்தகங்கள், அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், சுய முன்னேற்ற புத்தகங்கள், சுய தொழில் புத்தகங்கள் என, பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன்விவரம், https://nellaibookfair.in என்ற இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது. இப் புத்தகங்களை நன்கொடையாக வழங்க ஆர்வமுள்ள நன்கொடையாளர்கள், இந்த இணையதளத்துக்குச் சென்று, தாங்கள் விரும்பும் கிளை நூலகத்தை தேர்ந்தெடுத்து, தங்கள் நன்கொடையை வழங்கலாம்.
ஆன் லைனில் தொகையை நேரடியாக செலுத்தி, அதற்குரிய ரசீதையும், மாவட்ட நிர்வாகத்தின் பாராட்டுச் சான்றிதழையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நன்கொடையாளர்கள் மூலம் பெறப்படும் புத்தகங்கள், 94 அரசு கிளை நூலகங்களுக்கும் இவ்விழாவின் கடைசி நாளன்று கொடுக்கப்படும். ‘புத்தகப் பாலம்’ என்ற இந்த முயற்சியானது புத்தகங்கள் தேவைப்படும் கிளை நூலகங்களையும், நன்கொடை யாளர்களையும், விற்பனை யாளர்களையும் ஒருங்கிணைக்கும் பாலமாக செயல்படும். பல்வேறு இடங்களில் வாழும், குறிப்பாக வெளியூர், வெளிநாடுகளில் வாழும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த பொது மக்கள், தாங்கள் விரும்பும் கிளை நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களை இணையதளம் வாயிலாக எளிதான முறையில் நன்கொடையாக வழங்கலாம். இத்தகைய புத்தக நன்கொடையினால், கிளை நூலகங்களைச் சார்ந்துள்ள கிராமப்புற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் கிராமப்புற இளைஞர்களும் பெரிதும் பயனடைவர். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
மாணவர்கள் ஆர்வம்
இதனிடையே, புத்தகத் திருவிழாவில் மாணவர்களின் படைப்பாற்றலுக்கு வாய்ப்பு தந்து ‘ஒரு நாளில் ஒரு புத்தகம்’ எனும் பெயரில், மாணவர்கள் நூல் உருவாக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
பொருநை நாகரீகம், நதிநீர் மேலாண்மை, அகழ்வாய்வுகள், அரிய நூல்கள், நெல்லை வரலாறு, நெகிழியில்லா நெல்லை, வாசிப்பு அனுபவம் ஆகியவற்றை மையப்படுத்தி கட்டுரை, கவிதை, சிறுகதைகளை எழுதி 24 மணி நேரத்தில் கையெழுத்து பிரதியாக நூலாக்கம் செய்தனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வரும் 27-ம் தேதி நிறைவு நாளில் இந்த மாணவர் படைப்பு நூல் வெளியிடப்படுகிறது.
புத்தகத் திருவிழா நடைபெறும் வ.உ.சி மைதான வளாகத்தில் பனையோலை, மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், வாழை நார்கள் ஆகியவற்றின் மூலம் வாழ்வியல் பொருட்களை தயாரிக்க பயிற்சி பட்டறைகள் நடைபெற்று வருகின்றன. பள்ளி மாணவர்களின் கையெழுத்து பிரதிகளும் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT