Published : 19 Apr 2016 08:29 AM
Last Updated : 19 Apr 2016 08:29 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 7 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு: பாலபாரதி உள்ளிட்ட 3 பேருக்கு சீட் இல்லை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியலில் தற்போதைய எம்எல்ஏக்கள் 7 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பாலபாரதி உள்ளிட்ட 3 பேருக்கு சீட் வழங்கப்படவில்லை.

தேமுதிக - தமாகா - மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 5 தனித் தொகுதிகள் உட்பட 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 10 தொகுதி களில் மார்க்சிஸ்ட் வெற்றி பெற்றது. அதில் அ.சவுந்தரராஜன் (பெரம்பூர்), கே.பாலகிருஷ்ணன் (சிதம்பரம்), கே.தங்கவேல் (திருப்பூர் தெற்கு), ஏ.லாசர் (பெரியகுளம் - தனி), க.பீம்ராவ் (மதுரவாயல்), ஆர்.ராமமூர்த்தி (விக்கிரவாண்டி), வி.பி. நாகை மாலி (கீழ்வேளூர் - தனி) ஆகிய 7 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி விதிகளின்படி 2 முறை வெற்றி பெற்றவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது. அந்த அடிப்படையில், திண்டுக்கல் தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற கே.பாலபாரதி, தருமபுரி மாவட்டம் அரூர் (தனி) தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற பி.டில்லிபாபு, கடந்த 2011 தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஆர்.அண்ணாதுரை ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

25 பேரில் 3 பேர் பெண்கள். மதுரவாயல் (க.பீம்ராவ்), நெய்வேலி (டி.ஆறுமுகம்), லால்குடி (எம்.ஜெயசீலன்), போளூர் (பி.செல்வன்) ஆகிய 4 பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் ஆர்.ராமமூர்த்தி தவிர மற்ற 24 பேரும் கட்சியின் முழுநேர ஊழியர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 3 மத்தியக் குழு உறுப்பினர்கள், 2 மாநில செயற்குழு உறுப்பினர்கள், 9 மாநிலக் குழு உறுப்பினர்கள், 9 மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், 2 தமிழ்நாடு விவசாய சங்க மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மார்க்சிஸ்ட் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கட்சியே ஏற்கும். வேட்பாளர்கள் தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்யக் கூடாது. எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர்கள் தங்களது மாத ஊதியத்தை கட்சிக்கு வழங்க வேண்டும். மற்ற முழுநேர ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியமே அவர்களுக்கும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் எம்எல்ஏக்கள் தங்களது சொத்துக் கணக்கை கட்சிக்கு அளிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளை நானும் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனும் மேற்கொள்ள இருக் கிறோம். அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் பிரச்சாரத்துக்கு வரவுள் ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x