

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் பழமை வாய்ந்த சிறுவர் பூங்கா உரிய பராமரிப்பு இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் நகராட்சிக்கு அருகாமையில் ‘சேர்மன் வி.எஸ்.வீரபத்திர முதலியார் சிறுவர் பூங்கா’ கடந்த 1941-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பழமையான சிறுவர் பூங்கா உரிய பராமரிப்பு இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதால் குழந்தைகளும், பெண்களும் பூங்காவுக்குள் செல்ல அச்சப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் பூங்காவை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் அருகே சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் சிறுவர் பூங்கா உள்ளது. இங்கு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள இடவசதியும், சிறுவர்கள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நகராட்சி நிர்வாகம் இந்த பூங்காவை பராமரித்து வந்தது.
திருப்பத்தூர் நகர மக்களின் பொழுது போக்கு இடமாக இருந்த பூங்கா தற்போது சிதிலமடைந்து பொலிவிழந்து காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் அதை உரிய முறையில் பராமரிக்காதது தான் இதற்கு முக்கியகாரணம். நகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கால் அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தும், சில பொருட்கள் திருடும் போகியுள்ளன.
இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பூங்காவுக்குள் நுழைந்து அங்கேயே மது அருந்துகின்றனர். பழமை வாய்ந்த பூங்காவை இத்தனை காலம் நகராட்சி அதிகாரிகள் சீரமைக்க முன் வரவில்லை. தற்போது, புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள மக்கள் பிரதிநிதிகளாவது திருப்பத் தூர் பூங்காவை சீரமைக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது’’ என்றனர்.
இது குறித்து நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும் போது, ‘சேர்மன் வி.எஸ்.வீரபத்திர சிறுவர் பூங்காவில் மின்விளக்கு அமைக்க ஏற்கெனவே உத்தர விடப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் அங்கு மின்விளக்கு அமைக்கப்படும்.
அதேபோல, சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை மாற்றி விட்டு புதிய விளையாட்டு உபகரணங்கள் ஏற்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப் படும். சமூக விரோத கும்பல் உள்ளே நுழையாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.