

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கோயிலில் உள்ள 350 ஆண்டுகள் பழமையான மரச்சிற் பங்கள் சேதுபதி மன்னர்களின் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கின்றன.
திருப்புல்லாணி கோயில் கோபுரத்தில் அழகிய மரச் சிற்பங் கள் காணப்படுகின்றன. கல்லிலே கலை வண்ணம் கண்ட பல்லவ மன்னர்களைப்போல, மரங்களைக் கொண்டு கலை வண்ணம் படைத் துள்ளார்கள் சேதுபதி மன்னர்கள்.
இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மரத்தில் சிற்பங்கள் செதுக்கும் கலை சங்க காலந்தொட்டு தமிழகத்தில் வளர்ந்துள்ளது. சில வைணவக் கோயில்களின் மூலத் திருமேனிகளை அத்தி மரத்தால் செய்து தைலக்காப்பு பூசியுள்ளனர். பல கிராமக் கோயில்களில் சுவாமி சிலைகள் மரத்தால் செய்யப்பட்டு வண்ணம் பூசப்பட்டு வழிபடப் படுகின்றன.
ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணியில் ஆதிஜெக நாதப் பெருமாள் கோயில் உள்ளது. திருமங்கையாழ்வாரால் 21 பாசுரங் களால் மங்களாசாசனம் செய்யப் பட்ட இத்தலம், 108 வைணவ திவ்ய தேசங்களில், 44-வது தலமாகப் போற்றப்படுகிறது.
கி.பி.1646 முதல் கி.பி.1676 வரை போகலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திருமலை ரெகு நாத சேதுபதி, திருப்புல்லாணி கோயிலில் உள்ள காங்கேயம் மண்டபம், நுழைவு வாயில் கோபு ரம், கண்ணாடி மண்டபம், தாயார் சன்னதி, பெருமாள் சன்னதி, ஆண்டாள் சன்னதி, திருச்சுற்று மதில்கள், ராஜகோபுரம், சக்கரத் தீர்த்தம், மடப்பள்ளி ஆகிய கட்டுமானங்களைச் செய்தார் என தளசிங்கமாலை என்ற பண்டைய நூல் கூறுகிறது.
திருப்புல்லாணி கோயில் ராஜகோபுரம் 5 தளங்களுடன் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. 5 தளங்களிலும் சேதுபதி மன்னர்கள் காலத்திய மரச் சிற்பங்கள் உள்ளன. ராவணனின் தம்பி விபீடணன் புல் லாகிய பாம்பு படுக்கையில் கிடந்த நிலையில் இருக்கும் காட்சி, ராமரின் வலதுபுறம் கைகூப்பிச் சரணடைந்த நிலையில் இருக்க, அவரின் இடதுபுறம் வருணபகவான் தன் மனைவியுடன் கைகூப்பிச் சரண டைந்த நிகழ்வுகளை மரச்சிற்பங் களாக முதல் தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மற்ற தளங்களில் அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் ஆதிஜெகநாதப் பெருமாளை ராமபிரான் வணங்கி, ராவண வதஞ்செய்ய அவரால் கொடுக்கப் பட்ட ‘கோதண்டம்’ வில்லைப் பெறுவது, கிளி வாகனத்தில் ரதியும், அன்ன வாகனத்தில் மன்மதனும் எதிரெதிரே அம்பு எய்யும் காட்சி, ராமர் பாம்பில் படுத்த நிலையில் இருக்க, அவரின் தொப்புள் கொடியில் முப்பத்து முக்கோடி தேவர்கள் தோன்றும் காட்சி, ராமபிரான் அனுமனின் தோளில் அமர்ந்தும், ராவணன் தேரில் இருந்தும் போர் புரியும் காட்சி, இலங்கை செல்ல சேது பாலம் அமைக்கும் காட்சியில் குரங்குகள் பாலம் கட்ட ராமர் பாலம் மீது அமர்ந்திருக்கும் காட்சி ஆகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 350 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த மரச் சிற்பங்கள் சேதுபதி மன்னர்கள் கால சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மரச்சிற்பங்கள் காலத்தால் அழியக் கூடியவை. எனினும், திருப்புல்லாணி கோயிலில் உள்ள மரச்சிற்பங்களை, தேவஸ்தான நிர்வாகிகள் தற்போதும் சிறந்த முறையில் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.