Published : 24 Mar 2022 02:47 PM
Last Updated : 24 Mar 2022 02:47 PM

தமிழகம் வரும் இலங்கை அகதிகளை சிறையில் அடைக்க ராமேசுவரம் நீதிமன்றம் உத்தரவு: என்ன செய்யப்போகிறது அரசு? 

தமிழகத்தில் அகதிகளாக வந்துள்ள இலங்கைத் தமிழர்கள்

ராமேசுவரம்: வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள தமிழர்கள் சட்டவிரோதமாக கடல்வழியில் உயிரைப் பணயம் வைத்து படகுகளில் தமிழகத்திற்கு அகதிகளாக வரத் துவங்கி உள்ளனர். அப்படி வருவோரை இப்போதுள்ள சட்ட நடைமுறையின்படி, சிறையில் அடைக்க ராமேசுவரம் நீதிமன்றம் உத்தரவிட்டு வரும் நிலையில், இந்தப் பிரச்சினையை தமிழக அரசு எப்படி அணுகப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை தலா மூன்று பேர் என மொத்தம் 6 கொண்ட இரண்டு குடும்பத்தினர் அதிகளாக ஒரே படகில் தனுஷ்கோடி அருகே உள்ள நான்காம் மணல் தீடை பகுதியில் வந்திறங்கினர். தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு வவுனியாவிலிருந்து சிவசங்கரி (35) அவரது கணவர் அஸிம் (45) இவர்களது நான்கு குழந்தைகள் ஷாம்ளா (18), அஸிம்முதின் (15), முகம்மது (13), பூமிகா (8) மற்றும் சிவசங்கரியின் சகோதரர் சிவரத்தினம் (30), அவரது மனைவி சிந்து (27), இவர்களது இரண்டு குழந்தைகள் விஷாலினி (8), சிந்துஜா (5) என மொத்தம் 10 பேர் ஒரு ஃபைபர் படகில் தனுஷ்கோடி வந்து சேர்ந்தனர்.

உயிரை பணயம் வைத்து பயணம்: இந்த 10 பேரும் தலைமன்னாரில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை புறப்பட்டு நடுக்கடலில் படகின் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக உணவு, தண்ணீர் இன்றி சுமார் ஒன்றரை நாட்களாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்தளித்த நிலையில், என்ஜினை சரி செய்து தனுஷ்கோடியின் வடக்கு மீன்பிடி இறங்குதளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வந்து இறங்கியதாக அதிகாரிகளின் விசாரணையின்போது தெரிவித்தனர். இதில் செவ்வாய்கிழமை அதிகாலை தனுஷ்கோடி நான்காம் மீணல் தீடையில் வந்திறங்கிய 6 பேரும் மண்டபம் மெரைன் போலீசார் பாஸ்போர்ட் தடை சட்டத்தின் வழக்குப் பதிவு செய்து புதன்கிழமை ராமேசுவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 06.04.2022 தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்திரவிட்டது.

சிறையில் அடைக்க உத்தரவு: இதனைத் தொடர்ந்து 6 பேர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கஜேந்திரனை (24) புழல் மத்திய சிறைக்கும், கஜேந்திரனின் மனைவி மேரி கிளாரி (24) இவர்களது நான்கு மாத குழந்தை ஆகியோரை புழல் பெண்கள் சிறைக்கும். மன்னார் மாவட்டம் சிலாபத்தை சேர்ந்த தியோரி (28). அவரது இளைய மகன் மோசஸ் (4) புழல் பெண்கள் சிறைக்கும் கொண்டு செல்லப்பட உள்ளனர். மற்றொரு 9 வயது குழந்தையான எஸ்தர் வேலூர் மாவட்டம், அறச்சலூர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் தியோரியின் அம்மாவான சித்ரா என்பவரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். மேலும், வவுனியாவிலிருந்து செவ்வாய்கிழமை இரவு வந்த 10 அகதிகள் தற்காலிகமாக மண்டபம் அகதிகள் முகாமிலும் தங்க வைத்துள்ளனர்.

இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக்கட்டத்திலிருந்தே அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், 2012-ம் ஆண்டின் இறுதியில் இருந்து இலங்கையில் இருந்து அகதிகளாக வருபவர்களை காவல்துறையினர் கைது செய்து பாஸ்போர்ட் ஆவணச் சட்டத்தின் கீழும், சட்ட விரோதமாக வந்ததாகவும் 2 பிரிவுகளிலும் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தின் மூலம் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் அகதிகளின் குடியுரிமைக் கோரிக்கைகள் கருணையுடன் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனாலும் 2019-ம் ஆண்டின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்த இந்துக்களைப் போலத் இலங்கையிலிருந்து வந்த அவர்களுக்கு குடியுரிமை வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்க உண்மை.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக குழந்தைகளுடன் தங்களின் உயிரை பணயம் வைத்து படகுகளில் தமிழகத்தில் தஞ்சம் புகும் அகதிகள் சிறையில் அடைக்கப்படுவது மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் உறுதி: இதனிடையே சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "இலங்கை தமிழர்கள் இன்றைக்கு பல துன்பங்களுக்கு, துயரங்களுக்கு ஆளாகியிருக்கக் கூடிய சூழ்நிலையில், பரிதவித்துக் கொண்டிருக்கக் கூடிய அந்த தமிழர்கள், அண்மையில் தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கக் கூடிய செய்திகளை எல்லாம் நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதுதொடர்பாக நேற்றே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இதுதொடர்பாக மத்திய அரசிடமும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் தொடர்புகொண்டு இதை எப்படிக் கையாள வேண்டும் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம். எனவே, அதற்கொரு விடிவுகாலத்தை இந்த தமிழக அரசு ஏற்படுத்தி தரும் என்ற நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இலங்கைத் தமிழ் அகதிகள் பின்புலம்: இலங்கையில் 1983-ம் ஆண்டு உள்நாட்டு போர் துவங்கிய போது அந்நாட்டு ராணுவம் மற்றும் சிங்களர்களால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். இதனால், இலங்கையிலிருந்து இருந்து அகதிகளாக உலகம் முழுவதும் தமிழ் மக்கள் புலம்பெயரத் துவங்கினர். கடந்த 1983-ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 அகதிகள் வந்துள்ளனர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் (UNHCR), தமிழக மற்றும் இந்திய அரசின் மூலமாக சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் இலங்கைக்கு திரும்பி சென்றுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள 108 முகாம்களில் 58,843 இலங்கைத் தமிழ் அகதிகள் தங்கியுள்ளனர். மேலும், முகாமிற்கு வெளியே உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து இலங்கை தமிழ் அகதிகள் 34,135 பேர் தங்கியுள்ளனர். மேலும், ஒடிசாவின் மல்கன்கிரியில் உள்ள அகதி முகாமில் 54 பேர் தங்கியுள்ளனர்.

தமிழக முகாம்களில் உள்ள அகதிகளின் குடும்பத் தலைவருக்கு மாதம் 1,500-ம், 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000-ம், 12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ. 500-ம் என உதவித்தொகையும், வருடாந்திர கல்வி உதவி, வீடு, மின்சாரம், குடும்பத்திற்கு மாதம் 20 கிலோ இலவச அரிசியும், மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன.

முகாமிற்கு வெளியே கூலி வேலைக்குச் சென்று விட்டு மாலையில் முகாம்களுக்கு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர். இலங்கை தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிப்பது அந்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், மலையகங்களில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் ஆடை உற்பத்தி ஆகும். உலகளாவிய கரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் இலங்கையில் சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஆடை தயாரிப்பு ஆகிய மூன்றும் முற்றிலுமாகப் பாதிப்படைந்தது.

இதனால், இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன் படிப்படியாகப் பொருளாதாரப் பின்னடைவையும் சந்திக்கத் துவங்கியது. தொடர்ந்து இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு முட்டை ரூ. 36, தேநீர் ரூ.100, அரிசி ரூ. 200, வெங்காயம் ரூ.250, கோழி இறைச்சி ரூ.1,000-க்கும் விற்கப்படுகிறது. உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள முடியாமல் பசியால் தவிக்கும் இலங்கைத் தமிழர்கள் இப்போது பிழைப்பதற்காக தமிழகம் நோக்கி அகதிகளாக வரத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x