Published : 24 Mar 2022 02:43 PM
Last Updated : 24 Mar 2022 02:43 PM

வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் கனிம வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம் காட்டம்

சென்னை: வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் கனிம வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என வலியுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், மணல் மற்றும் கனிமப் பொருட்களை கடத்த பயன்படுத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீதான நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 36 பேரிடமிருந்து சட்டவிரோதமாக மணல் மட்டும் கனிம பொருட்களை கடத்தியதாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்க நாகை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் மறுத்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தனர்.

அந்த வழக்கில், தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. தங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரிகள், பொக்லைகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த வாகனங்கள் வெயில், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் சிக்கி பாதிப்புக்குள்ளாகிறது . இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுவதால் அவற்றை விடுவிக்க வேண்டுமெனவும், விசாரணைக்கு தேவைப்படும்போது அந்த வாகனங்களை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். வாகன உரிமையாளர் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், இழுத்தடிப்பு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

மேலும், நமது தாய் மண்ணை எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் முன்னோர்கள் வழங்கியுள்ளனர். இதை வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் எந்தக் காரணத்தையும் முன்னிட்டும் கனிம வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. இந்த இயற்கை வளங்கள் எதிர்கால சந்ததியினருக்கு தேவைப்படும். இந்த பூமி மீது ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பாதிப்பையும் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கக் கூடாது.

சுத்தமாக ஓடிய ஆறுகள் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மணல் கடத்தல் வழக்குகளில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதையும் மேற்கோள் காட்டி இந்த வழக்கை முடித்து வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x