Published : 24 Mar 2022 07:30 AM
Last Updated : 24 Mar 2022 07:30 AM

கதர் வாரியத்தில் பாரம்பரிய அரிசி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை: கைத்தறித் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

காதி வாரியத்தில் உற்பத்தி செய்யப்படும் காதி கிராமப் பொருட்களான பாரம்பரிய அரிசி வகைகள் ‘காதி பாரம்பரியம்’,செக்கினால் தயாரிக்கப்படும் நல்லெண்ணெய், கடலெண்ணெய் ‘காதி நியூலைப்’, நறுமணம் கொண்ட அகர்பத்திகள் ‘காதி ஃபிரஷ்’ ஆகிய பெயர்களில் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விற்பனையை சென்னை குறளகத்தில் அமைச்சர்கள் ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். உடன் கைத்தறி, கதர் துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கதர் கிராம தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர் பொ.சங்கர், சென்னை மாமன்ற உறுப்பினர் கே.சரஸ்வதி.

சென்னை: கதர் வாரியம் தயாரித்துள்ள புதிய பொருட்கள் விற்பனை மற்றும் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் ஆகியவற்றை கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் ‘காதி பராம்பரியம்’ என்றபெயரில் தூயமல்லி, கருப்பு கவுனி, பூங்கார், சீரக சம்பா,மாப்பிள்ளை சம்பா, ரத்தசாலி மற்றும் பூங்கார் அரிசி வகைகளையும், ‘காதி நியூ லைப்’ என்றபெயரில் கடலெண்ணெய், நல்லெண்ணெய், ‘காதி ஃபிரஷ்’ என்ற பெயரில் நறுமணங்களைக் கொண்ட அகர்பத்திகள், மதிப்புக் கூட்டப்பட்ட தேன் வகைகளை தயாரித்துள்ளது.

இப்புதிய பொருட்கள் அறிமுகவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று புதிய பொருட்களை அறிமுகப்படுத்தினர்.

பின்னர், கைத்தறித் துறை ஆணையரகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெசவாளர் குறைதீர்க்கும் மையத்தையும் அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நெசவாளர்கள் வேலைவாய்ப்பு, கூலி உயர்வு உள்ளிட்ட தங்களது குறைகளைத் தெரிவிக்கவும், கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும் வேண்டி இந்தகுறைதீர்ப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. https://gdp.tn.gov.in/dhltx என்ற இணையதளம் மூலமாகவும், wgrcchennai@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும், 044-25340518 என்ற தொலைபேசி எண்மூலமாக தொடர்பு கொண்டு நெசவாளர்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்கலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x