

மெட்ரோ ரயில்களில் இயக்க பதிவு கருவிகள் பொருத்தி இருப்பதால், எதாவது, சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் கட்டுப்பாட்டு அறைக்கும், ஓட்டுநருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னையில் இயக்கப்படும் ஒவ்வொரு மெட்ரோ ரயில்களிலும் அதன் ஒட்டுமொத்த இயக்கத்தையும் பதிவு செய்யும் வகையில் ‘பதிவு கருவிகள்’ பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவி மூலம் ரயில் இயக்கத்தின் வேகம், தூரம், சப்தம் அளவு, உராய்வுகள், ரயில் பாதையின் தன்மை உள்ளிட்ட ஒட்டுமொத்த தகவல்களும் பதிவாகும்.
மெட்ரோ ரயில் இயக்கத்தின்போது, திடீரென எதாவது கோளாறுகள் ஏற்பட்டால் மெட்ரோ ரயில் மையத்தின் கட்டுபாட்டு அறைக்கும், சம்பந்தபட்ட ரயில் ஒட்டுநருக்கும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறு திரை மூலம் தகவல் தெரிவிக்கும். இதன்படி, உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்’’ என்றனர்.