Published : 24 Mar 2022 06:19 AM
Last Updated : 24 Mar 2022 06:19 AM
சென்னை: சட்டவிரோதமாக ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு மாற்று இடம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவைச் சேர்ந்த எஸ்.கார்த்திகேயன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘திருப்பூர் மாவட்டம், கரடிவாவி கிராமத்தில் சுமார் 6 ஏக்கர் பரப்பில் உள்ள சின்னக்குட்டை என்ற குளத்தை நம்பியே இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மழைநீர் இந்த குளத்தில் சேகரிக்கப்பட்டு வருவதால் தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த குளத்தை சிலர் கொஞ்சம், கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகின்றனர். தற்போது இங்கு பெரிய அளவில் வீடுகள், குடோன்கள், விசைத்தறி கூடங்கள், கோழி வளர்ப்பு கூடங்கள் என குளத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளதால் குளத்திற்கு தண்ணீர் வரும் வழித்தடங்கள் அடைபட்டுள்ளன. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும், என அதி்ல் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பி்ல் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜராகி, இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனுதாரர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் போராடி வருகிறார். இதுவரையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை, என்றார்.
அரசு தரப்பில், ‘‘அந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் ஏழை, எளிய மக்கள் குடியிருந்து வருவதால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி, அதன்பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும், என்றார். அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களுக்கு மாற்று இடம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. எந்த சட்டத்தின் அடிப்படையில் இதுபோல மாற்று இடம் கொடுக்கப்பட்டு வருகிறது, என கேள்வி எழுப்பினர்.
மேலும் ஏழைகளுக்கு மாற்று இடம் கொடுப்பதில் ஆட்சேபம் இல்லை. ஆனால் இந்த குளத்தை ஆக்கிரமித்து பல அடுக்குமாடி கட்டிடங்களை கட்டியவர்கள் ஏழையா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். மாற்று இடங்களை வழங்கினால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அரசே ஊக்குவிப்பது போலாகி விடும்.
எனவே நீர்நிலைகளை ஆக்கிரமித்து ஏழைகள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகி்ன்றனர் என்பதையெல்லாம் ஏற்க முடியாது. மனுதாரர் குறிப்பிட்டுள்ள கரடிவாவி சின்னக்குட்டை குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட ஆட்சியர் 10 நாட்களுக்குள் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT