

சென்னை: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் உயர்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
ஆரம்பத்தில் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் எண்ணெய் விலையை மாற்றி அமைத்தன. ஆனால், 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை என மாற்றி அமைக்கப்பட்டது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. தற்போது 5 மாநில தேர்தல் முடிவடைந்துள்ளதுடன், ரஷ்யா-உக்ரைன் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இதனால், பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நேற்றுமுன்தினம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதன்படி, சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு தலா 76 காசுகள் உயர்த்தப்பட்டு, பெட்ரால் ரூ.102.16-க்கும், டீசல் ரூ.92.19-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.102.91-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.92.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை உயர்வு காரணமாக, ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களின் வாடகையும் உயர வாய்ப்புள்ளது. அதேபோல, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.