

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஜோசப் தலைமை வகித்தார். தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பிரபாகரன் மற்றும் விடியல் வீரபெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தொழிற்சங்க தலைவர் சக்திவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக்கோரி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுப்புலட்சுமி மதுரை மாவட்ட மகளிர் அணி செயலாளர் தங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.