ஏப்.10-ல் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தேர்தல் சிறப்பு மாநாடு: விஜயகாந்த் அழைப்பு

ஏப்.10-ல் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தேர்தல் சிறப்பு மாநாடு: விஜயகாந்த் அழைப்பு
Updated on
1 min read

மாமண்டூரில் வரும் 10-ம் தேதி அன்று நடைபெற உள்ள தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் சிறப்பு மாநாட்டில் தொண்டர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசியலில் மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்க அமைந்திருக்கும் வெற்றிக் கூட்டணியான தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் வருகின்ற 10.04.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே மாமண்டூரில் தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெறவுள்ளது.

அதில் நானும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ(எம்) மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்ற இருக்கிறோம்.

அச்சமயம் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் அனைத்துக் கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் தாங்கள், தங்கள் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் நாட்டு நலனில் அக்கறைகொண்ட நல்லவர்களோடும் அணிதிரண்டு வந்து, இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக நடந்திடும் வகையில் அலைகடலென திரண்டு ஆர்ப்பரித்து வாரீர்! உங்கள் அனைவரையும் மாநாட்டில் சந்திக்க ஆவலாக உள்ளேன்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in