

தமிழக தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க 119 பொது பார்வை யாளர்கள் தமிழகம் வந்தனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ளன. இதனால், தேர்தல் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தேர்தல் பணியாளர்கள், அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் பணப்பட்டுவாடாவை தடுக்க ஏற்கெனவே 12 சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகத்தில் பணியை தொடங்கினர். இவர்கள் நேற்றுடன் பணியை முடித்து திரும்பினர். வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியதும், 2 தொகுதிகளுக்கு ஒருவர் என 122 செலவின பார்வையாளர்கள் தமிழகம் வந்து தங்கள் பணியை தொடங்கியுள்ளனர்.
இவர்கள் தவிர தேர்தல் பொது பார்வையாளர்கள் 122 பேர் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் நேற்று தமிழகம் வந்தனர். இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
தேர்தல் பொது பார்வையாளர்களில் 119 பேர் தமிழகம் வந்துள்ளனர். திருத்தணி, திருவள்ளூர்- ராசிபுரம், சேந்தமங்கலம்- தஞ்சை, ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளுக்கான 3 பார்வையாளர்கள் இன்னும் வர வில்லை. அருகில் உள்ள பார்வை யாளர்கள் இந்த தொகுதிகளை கவனித்துக்கொள்வர்.
ரூ.73 கோடி பறிமுதல்
தமிழகத்தில் பறக்கும் படையினர் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்பட உள்ளது. பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், வருமான வரி புலனாய்வு பிரிவினர் சோதனையில் இதுவரை ரூ. 73 கோடியே 69 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.21 கோடியே 33 லட்சம் வருமான வரித்துறையினரிடம் சிக்கியது.
நேற்று (28-ம் தேதி) ரூ.2.64 கோடி ரொக்கப்பணம் சிக்கியுள்ளது. இன்று (29-ம் தேதி) மதுரையில் வருமானவரித் துறையினர் சோதனையின் போது ஒரு வீட்டில் ரூ.25 லட்சம் சிக்கியுள்ளது. விழுப்புரத்தில் வாகன சோதனையின் போது ரூ.48 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகள் சிக்கியுள்ளன.
தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நடத்தும்போது கவனிக்க வேண்டியவை தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் கள் தமிழக அரசியல் கட்சி களுக்கு கடிதம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.