

காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாகிப் தர்காவில் இன்று (மார்ச் 23) அதிகாலை சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது.
காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற மஸ்தான் சாகிப் வலியுல்லா தர்கா ஷரீபில் ஆண்டுதோறும் சிறப்பான முறையில் கந்தூரி விழா நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டு 199-வது கந்தூரி விழா மார்ச் 13 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது. இதனையொட்டி, நேற்று இரவு 11 மணியளவில் ஹலபு எனப்படும் போர்வை வீதியுலாவும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலமும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
தொடர்ந்து இன்று அதிகாலை ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. இதில் வக்பு நிர்வாக சபையினர், திரளான இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மார்ச் 25-ம் தேதி கொடியிறக்கம் செய்யப்பட்டு கந்தூரி விழா நிறைவடையும்.