

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவரை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து அதை செல்போனில் படம் பிடித்து நண்பர்களுக்கு அனுப்பிய மேலத்தெருவை சேர்ந்த ஹரிஹரன் (27) என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
மேலும், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டி அப்பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்த செந்தில் விநாயகம் தெருவைச் சேர்ந்த ரைஸ் மில்உரிமையாளர் மகனும், திமுகஇளைஞரணி வார்டு அமைப்பாளருமான ஜூனத் அகமது (27), முத்தால் நகரைச் சேர்ந்த மாடசாமி, ரோசல்பட்டியைச் சேர்ந்த பிரவீன் ஆகியோரை பாண்டியன் நகர் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மேலும், இதேபோல் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 8 பேரும் வில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நேற்று முன்தினம் இரவு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நீதிபதி (பொறுப்பு) கோபிநாத் சிவகாசியில் நீதிபதிகள் குடியிருப்பில் இருந்ததால், ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரும் சிவகாசி அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அதையடுத்து, சிறுவர்கள் இளைஞர் நீதிக் குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மதுரையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து, மதுரை சரக டிஐஜிபொன்னி விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
181-க்கு போன் செய்யலாம்
பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தங்க வைக்கப்பட்டு கவுன்சலிங் அளிக்கப்படுகிறது. பாலியல் தொந்தரவால் பெண்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் தைரியமாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம். அல்லது 181 என்ற தொலைபேசி மூலமும் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
திமுக பிரமுகர் நீக்கம்
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘விருதுநகர் (வடக்கு) மாவட்டத்தை சேர்ந்த ஜூனைத் அகமது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார்’’ என்று கூறியுள்ளார்.