Published : 23 Mar 2022 08:55 AM
Last Updated : 23 Mar 2022 08:55 AM

கரோனா 4-வது அலை வருமா என தெரியாது: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் தகவல்

சென்னை கோடம்பாக்கம் ஜாபர்கான்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ரூ.80 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று 4-வது அலை வருமா, வராதா என்று தெரியவில்லை. ஆனாலும், தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ரூ.1.87 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் டி.சினேகா, எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், 139-வது வார்டு கவுன்சிலர் ப.சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், போதிய இட வசதி இல்லாததால் அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை. தற்போது புதிதாக 12 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 39 பள்ளிகளை ரூ.126 கோடி மதிப்பில் தரம் உயர்த்த திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் 12 முதல் 14 வயதுடைய 21.21 லட்சம் சிறுவர்கள் உள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6.29 லட்சம் (29.66 சதவீதம்) சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல, 15 முதல் 18 வயதுடைய 28.37 லட்சம் சிறுவர்களுக்கு (84.81 சதவீதம்) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று 4-வது அலை வருமா, வராதா என்று தெரியவில்லை. ஆனாலும், தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு நிலவரம் பூஜ்ஜியமாக உள்ளது. அதேபோல, கடந்த 10 நாட்களாக இறப்பு எண்ணிக்கையும் பூஜ்ஜியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டோம் என பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அடுத்த 3 மாதங்களுக்குத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

அருகில் உள்ள மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் இன்னும் 51 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.32 கோடி பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போடாமல் உள்ளனர். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x