Published : 23 Mar 2022 07:31 AM
Last Updated : 23 Mar 2022 07:31 AM
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் ஏரியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் கனடா, சைபீரியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்து செல்கின்றன. இங்கு வரும் பறவைகளைக் காணத் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த சரணாலயத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் பல்வேறு இடங்களில் விதிகளை மீறி கல்குவாரிகள் இயங்கி வருவதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாகப் புவியில் மற்றும் சுரங்கத் துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வந்தது.
இந்நிலையில், சென்னை வன உயிரின காப்பாளர் அலுவலகத்திலிருந்து வன உயிரின காப்பாளர் பிரசாந்த் மூலம் கடிதம் ஒன்று புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் வேடந்தாங்கல் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 கி.மீ. பரப்பளவுள்ள இடம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆகும். அதன்பிறகு உள்ள 10 கி.மீ சுற்றளவு இடம் சூழல் உணர்திறன் மண்டலம் ஆகும்.
இந்த பறவைகள் சரணாலயத்திலிருந்து மொத்தம் 15 கி.மீ. சுற்றளவுக்கு எந்த விதமான கல்குவாரிகள், தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி இல்லை. இந்தப் பகுதியில் இயங்கி வரும்கல்குவாரிகளுக்கான அனுமதியைஉடனடியாக ரத்து செய்ய வேண்டும். இப்பகுதியில் கல்குவாரி அமைக்க வேண்டும் என்றால் தேசிய வன உயிரின வாரிய நிலைக்குழுவின் பரிந்துரையைப் பெற வேண்டும். அனுமதி பெறாமல் இயங்கும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்தப் பகுதி விவசாயிகள் கூறும்போது, "வேடந்தாங்கலைச் சுற்றி உருவாகி வரும்கல்குவாரிகள் மற்றும் தொழிற்சாலைகளால் பறவைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் இந்த கடிதம்குறித்துக் கேட்டபோது, "ஆட்சியரிடம் பேசி இது தொடர்பாக முடிவுசெய்யப்படும்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT