Published : 23 Mar 2022 07:34 AM
Last Updated : 23 Mar 2022 07:34 AM
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிளாஸ்டிக் தடை சட்டத்தின்கீழ் கடைகள் சீல் வைக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருப்பது சிறு, குறு வணிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மத்திய அரசு அறிவிப்பின்படி, ஜூலை வரை வணிகத்தை இயல்பாக நடத்த அரசு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தயாரிப்பு நிலையிலேயே பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு முழுமையான மாற்று பொருட்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதுவரை வணிகர்களுக்கு தேவையான அனைத்து விழிப்புணர்வுகளையும் முன்னெடுத்து சென்று, பிளாஸ்டிக் பொருட்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.
கடந்த ஆட்சியில் உயர்த்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி மற்றும் அறநிலையத் துறை கடைகளுக்கான சம விகிதமற்ற வாடகை பிரச்சினைகளாலும் நீதிமன்றவழக்குகளாலும் வாடகை தொகை நிலுவையில் இருக்கிறது. வாடகை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஆய்வுக் குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. இக்குழு ஆய்வு செய்து வெளியிடும் நியாயமான வாடகை அறிவிப்பை ஏற்றுக்கொள்ள வணிகர்கள் தயாராக இருக்கிறார்கள். எனவே, இந்தப் பிரச்சினைக்கு அரசு தீர்வு காணும் வரை வணிகர்கள் மீது அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT