Published : 23 Mar 2022 06:14 AM
Last Updated : 23 Mar 2022 06:14 AM

ரூ.48 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குவதால் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் சாத்தியமில்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை: அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்தால் போக்குவரத்துக்கழகத்தை நடத்த முடியாது என்றும்,ரூ.48 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘‘பேருந்தில் இலவச பயணம் என்றதும் பெண்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், குறிப்பிட்ட பேருந்துகள் என்றதும் குறித்த நேரத்தில் பணிக்கு செல்லமுடியாமல் அவர்கள் மீண்டும் ‘ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பெண்கள் குரலாக நான் ஒலிக்கிறேன். மாநகர பேருந்துகளில் அனைத்து பேருந்துகளிலும் பயணம் என்றில்லாமல், குறிப்பிட்டபேருந்துகளில் மட்டுமே பெண்களுக்கு அனுமதிக்கப்படுகிறது’’ என்றார்.

இதற்கு பதில் அளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ‘‘தேர்தல் அறிக்கையில் கூறியபடி, மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு 40 சதவீதம் என்று அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 61.82 சதவீதம் என அதிகரித்துள்ளது. மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்பது, முதல்வரின் கனவுத்திட்டம்.

இத்திட்டத்துக்கு கடந்தாண்டு ரூ.1,380 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ரூ.1,510 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் மகளிர் பயணம் திருப்திகரமாக உள்ளது. அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்ய அனுமதித்தால், எப்படி போக்குவரத்துக் கழகத்தை நடத்துவது.

ஏற்கெனவே, ரூ.48 ஆயிரம் கோடி நஷ்டத்தில் போக்குவரத்துக் கழகங்கள் இயங்குகின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x