

கூடலூர்: பெரியாறு அணை மராமத்துப் பணிக்காகச் சென்ற தமிழகத் தொழிலாளர்களை கேரள வனத் துறையினர் திருப்பி அனுப்பினர்.
பெரியாறு அணை கேரளப் பகுதிக்குள் இருக்கிறது.இதனால், அங்குள்ள வனத்துறை யினரும், போலீஸாரும் பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு வருகின்றனர். அணை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருந் தாலும் கேரளாவின் அத்துமீறல் தொடர்கிறது.
மத்திய மூவர் கண்காணிப்புக் குழு உத்தரவின்பேரில், பெரியாறு அணைப் பகுதியில் கீறல் விழுந்த படிக்கட்டை சரி செய்தல், உதிர்ந்த சுவரில் சிமென்ட் பூசுதல், புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் கடந்த வாரம் நடந்தன.
இதன் தொடர்ச்சியாக கட்டுமானத் தொழிலாளர்கள் சிலர், தமிழக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுடன் நேற்று அணைப் பகுதிக்குள் செல்ல முயன்றனர்.
அப்போது தேக்கடியில் உள்ள கேரள வனத் துறை சோதனைச்சாவடி ஊழியர்கள் இவர்களை அணைக்குள் அனுமதிக்கவில்லை. வழக்கமாக நடக்கும் பணிதான் என்று தமிழக ஊழியர்கள் எடுத்துக் கூறியும் கேரள வனத்துறையினர் அதனை ஏற்கவில்லை. இனி மராமத்துப் பணிக்கு ஆட்களை அழைத்துச்செல்வதாக இருந்தால் முன்னதாகவே கடிதம் தர வேண்டும், எந்தப் பணி செய்யப் படுகிறது என்ற விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.
இந்தக் கடிதத்துக்கு கேரள நீர்வளத் துறையினர், கேரள போலீஸார் அனுமதி கொடுத்த பின்னரே செல்ல முடியும். மேலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை இருந்தால் தான் அனுமதிப்போம் என பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர்.இதனால் பணிக்குச் சென்றவர்கள் அணைப் பகுதிக்குச் செல்லாமலேயே திரும்பினர். கேரளாவின் அடுக்கடுக்கான நிபந் தனைகளால் தமிழக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சில வாரங்களுக்கு முன் தமிழக நீர்ப்பாசனத் துறை அலுவலகம் மற்றும் ஊழியர் குடியிருப்பு மராமத்துப் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்களை கேரள வனத் துறையினர் தடுத்து நிறுத்தினர். தமிழக விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அனுமதித்தனர்.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து அணை உரிமையை நிலைநாட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.