Last Updated : 26 Apr, 2016 08:47 AM

 

Published : 26 Apr 2016 08:47 AM
Last Updated : 26 Apr 2016 08:47 AM

போட்டியிலிருந்து விலகல்: வைகோ மனமாற்றத்தின் பின்னணி என்ன? - விடிய விடிய விவாதித்த பின் எடுத்த முடிவு

கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த சம்பவமே வைகோவின் தேர்தல் போட்டியிடும் முடிவை மாற்றியுள்ளது.

கோவில்பட்டி தொகுதியில் தான் போட்டியிடுவதாக வைகோ கடந்த 16-ம் தேதி அறிவித்தார். இதற்காகவே கூட்டணி கட்சிகளிடம் இத்தொகுதியை கடுமையாக போராடி வைகோ பெற்றார். தொண்டர்களும் உற்சாகமாக தேர்தல் வேலைகளைத் தொடங்கினர். வைகோவும் தேர்தலில் போட்டியிடுவதில் ஆர்வமாகவே இருந்தார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதாலும், இதுவரை சட்டப் பேரவை தேர்தலில் வென்றதில்லை என்பதாலும் இந்த முறை எப்படியும் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் சுறுசுறுப்பாக தேர்தல் வேலைகளை வைகோ செய்தார்.

பிரச்சாரம் தொடக்கம்

கோவில்பட்டி தொகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை வைகோ நேற்று முன்தினம் தொடங்கினார். முதல் நிகழ்ச்சியாக வடக்கு திட்டங்குளம் கிராமத்துக்கு மாலை 5 மணியளவில் சென்றார். அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்ட வைகோ, வேனில் இருந்து இறங்கி சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார்.

எதிர்ப்பு

அப்போது அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் சிலர், தேவர் சிலைக்கு வைகோ மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரி வித்து முழக்கமிட்டனர். உடுமலைப்பேட்டை சங்கர் கொலைக்கு கண்டனம் தெரிவித்ததையும், அவரது மனைவி கவுசல்யாவுக்கு ஆறுதல் கூறியதையும் குறிப்பிட்டு வைகோவுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதனால் சிலைக்கு மாலை அணிவிக்காமல் வேனுக்கு வந்த வைகோ, மைக்கில் பேசினார். அப்போது அவர், `நான் ஜாதிக்கு அப்பாற்பட்டவன். தேவர் சமுதாயத்துக்கு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளேன். தேவர் - நாயக்கர் மக்களுக்கு இடையே ஜாதி மோதலை உருவாக்க முயற்சி நடக்கிறது. இது தேர்தல் சமயமாக இருக்கிறது. இல்லையெனில் 100 பேர் வேல், கம்பு, அரிவாளுடன் வந்தாலும் எதிர்த்து நிற்கும் சக்தி எனக்கு உண்டு. துப்பாக்கிகளை கண்டு அஞ்சாதவன் நான். இதற்கு பயப்படமாட்டேன்’ என்று ஆவேசமாக கூறினார்.

மாலை அணிவித்தார்

இதையடுத்து மீண்டும் வேனில் இருந்து இறங்கிய வைகோ, தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். அந்த இளைஞர்கள் மீண்டும் கோஷ மிட்டதை தொடர்ந்து, அவர்களை போலீஸார் அடித்து விரட்டினர். அதன்பிறகு தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, வைகோ அங்கிருந்து சென்றார்.

தொடர்ந்து தெற்கு திட்டங்குளத்தில் இம்மானுவேல் சேகரனார் சிலைக்கு மாலை அணிவித்து, அங்கு பிரச்சாரம் செய்தார். அதன்பிறகு விளாத்திகுளம் தொகுதியில் பல்வேறு இடங்களில் அவர் பிரச்சாரம் செய்தார்.

கடும் வேதனை

நேற்று முன்தினம் மாலை வரை கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட வைகோ ஆர்வமாகவும், உற்சாகமாகவும் இருந்தார். வடக்கு திட்டங்குளம் சம்பவம்தான் அவரை மாற்றி விட்டது. இச்சம்பவத்தால் வைகோ மிகவும் மன வேதனை அடைந்துவிட்டார். இரவு முழுவதும் இச்சம்பவம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, ஆட்சி மன்றக் குழு செயலாளர் கணேச மூர்த்தி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்தியா உள்ளிட்டோரிடம் இரவு முழுவதும் இந்த பிரச்சினை குறித்து அவர் விவாதித்துள்ளார்.

தன்னை மையமாக வைத்து ஜாதி மோதலை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு நாம் இரையாகக் கூடாது.

எனவே, நான் தேர்தலில் போட்டியிடவில்லை என அவர்களிடம் வைகோ கூறியுள்ளார். வைகோவின் முடிவை கட்சி நிர்வாகிகள் ஏற்கவில்லை. ஆனால், வைகோ தொடர்ந்து பேசி நேற்று காலையில் அவர்களை சம்மதிக்க வைத்துள்ளார்.

நேற்று காலை மீண்டும் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி காட்ட முயன்றது மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த மோதல் ஆகியவை வைகோவை மேலும் மன வேதனை அடையச் செய்துள்ளது. இதனால் தேர் தலில் போட்டியிடுவதில்லை என்ற தனது முடிவில் உறுதியாக இருந்த வைகோ, அதனை யாரி டமும் தெரிவிக்காமல், விநாயகா ரமேஷ் வேட்புமனு தாக்கல் செய்த பிறகே முடிவை அறிவித்துள்ளார்.

வைகோவின் இந்த திடீர் முடிவு மதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி யுள்ளது. மேலும், கூட்டணி கட்சி தலைவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூட்டணி கட்சித் தலைவர்கள் வைகோவை தொடர்பு கொண்டு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், வைகோ தனது முடிவில் உறுதியாக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x