

தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்வதற்கான தடையை தமிழக அரசு விலக்கியுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக அமலில் இருந்த இந்தத் தடை நீக்கப்படுவதால், தமிழக காற்றாலை உள்ளிட்ட தனியார் மின் நிலையங்கள் வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் விற்கும் வாய்ப்பை பெற்றுள்ளன.
தமிழகத்தில் 7,500 மெகாவாட் நிறுவுதிறன் கொண்ட சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இதேபோல், எரிவாயு, நாப்தா போன்றவற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் 18 தனியார் நிறுவனங்களும் உள்ளன.
கடந்த 2009-ம் ஆண்டு தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டபோது ஆட்சியிலிருந்த திமுக அரசு, தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்திலேயே விற்கலாம். ஆனால், வெளி மாநில அரசு மற்றும் தனியாருக்கு விற்கக் கூடாது என்று தடை விதித்தது.
இந்திய மின்சார சட்டப்பிரிவு 11ன் படி, எரிசக்தித் துறைச் செயலர் பொறுப்பிலிருந்த தேவிதார், இதற்கான அரசாணையை பிறப்பித்தார். இதனால், தனியார் நிறுவனங்கள் வேறு வழியின்றி தமிழகத்திலேயே மின்சாரத்தை விற்று வந்தன.
ஆனால், காற்றாலை மின்சாரம் அதிகமாக உற்பத்தியாகும் மே முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில், காற்றாலையின் கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் நிறுத்தி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் காற்றாலை உற்பத்தியாளர்கள் வேறு மாநிலத்தில் தங்கள் நிலையங்களை நிறுவ முடிவு செய்தனர். இதுகுறித்து இந்திய காற்றாலைகள் சங்கத் தலைவர் கஸ்தூரி ரங்கையன், தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை சட்ட ஆலோசகர் கே.வெங்கடாசலம் ஆகியோர் தமிழக அரசுக்கு தொடர்ந்து மனுக்களை அளித்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மின் உற்பத்தி நிலை அதிகரித்துள்ளதால், வெளி மாநிலங்களுக்கான மின்சார விற்பனை மற்றும் ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எரிசக்தித் துறை முதன்மைச் செயலர் ராஜேஷ் லக்கானி இது தொடர்பான ஆணையை பிறப்பித்துள்ளார். இதன்மூலம் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு, சட்டப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது.
“தமிழக அரசின் தடை அமலில் இருந்த காலத்தில், ஒவ்வொரு ஆண்டும், காற்றாலைகளிலிருந்து ஆயிரக்கணக்கான மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படாமல் நிறுத்தப்பட் டிருந்தது. கடந்த ஆண்டு மட்டும், 4, 453 மில்லியன் யூனிட் மின்சார உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. இனி காற்றாலை மின்சார உற்பத்தியை முழுமையாக மேற்கொள்ள முடியும்” என்று தமிழக நூற்பாலைகள் சங்க (TASMA) தலைமை சட்ட ஆலோசகர் வெங்கடாசலம் கூறினார்.