

கோவை மாவட்ட மில் தொழிலாளர்கள் சங்கத்தின் (ஏஐடியுசி) கூட்டம், சங்கத்தின் தலைவர் பி.ஜெகநாதன் தலைமையில் கோவையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் எம்.ஆறுமுகம்அரசியல், இயக்கம் தொடர்பான வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
புலம் பெயர்ந்த தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும், நிறுவனங்களும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். வருங்கால வைப்புநிதி சேமிப்புத் தொகைக்கான வட்டியை 12 சதவீதமாக உயர்த்த வேண்டும். பஞ்சாலைகளில் இளம் பெண்களின் உழைப்பையும், வாழ்வையும் சூறையாடும் சுமங்கலி திட்டம் மோசடியை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். ஆலைக்குள் ஆண்டு முழுவதும் அடைத்துவைத்து 12 முதல் 15 மணி நேரம் வேலை வாங்குகின்றனர். அவர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. மாநில அரசு தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்திர ஓய்வூதிய தொகையை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் எனவும், அதிகபட்சம் அவர்கள் பெற்றுவரும் ஓய்வூதியம், பஞ்சப்படி தொகைக்கு ஏற்ப உயர்த்தியும் வழங்க வேண்டும். கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் உயர் மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.