Published : 09 Apr 2016 09:10 PM
Last Updated : 09 Apr 2016 09:10 PM

தேர்தல் வெற்றிக்கு ஒவ்வொருவரும் ஸ்டாலினைப் போல உழைக்க வேண்டும்: திமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள்

ஸ்டாலினைப் போல ஒவ்வொருவரும் தேர்தல் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆர்.கே.நகரில் கடந்த 8-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி வீடு, வீடாகச் சென்று துண்டறிக்கை விநியோகம் செய்வதை அவர் தொடங்கி வைத்துள்ளார்.

தெருமுனைப் பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம் மூலம் ஒவ்வொரு வாக்காளரையும் தனித்தனியாகச் சந்தித்து அதிமுக அரசின் தவறுகளை திமுகவினர் விளக்க வேண்டும். ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்ற முழக்கத்தோடு தேர்தல் களத்தில் திமுகவினர் நிமிர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது என் நெஞ்சம் நிறைகிறது.

தங்களுக்கு எதிரான வலுவான கூட்டணி அமையாமல் தடுக்க உளவுத் துறை, ஊடகங்கள் மூலம் எவ்வளவுதான் முயன்றாலும் அதை முறியடிக்கும் சக்தி திமுகவுக்கு உண்டு. கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, எஸ்சி, எஸ்டி மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், விவசாயிகள் தற்கொலை, தமிழகத்தின் கடன் அதிகரிப்பு, ஒரு மெகாவாட் கூட புதிய மின் உற்பத்தி செய்யாதது, 110-வது விதியின்கீழ் அறிவிக்கப்பட் திட்டங்களை செயல்படுத்தாதது, ஒட்டுமொத்த வளர்ச்சியில் 20-வது மாநிலமாக தமிழகம் இருப்பது உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வைத்துக் கொண்டு திமுகவினர் வீடு, வீடாகச் சென்று அவர்கள் கொடுக்கும் தண்ணீரை குடித்துவிட்டு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் என்ற பெயரில் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி முதல் வீடு, வீடாகச் சென்று துண்டறிக்கை விநியோகம் செய்யும் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார்.

அண்ணா காலத்தில் காலை முதல் நள்ளிரவு வரை பட்டி தொட்டியெங்கும் திமுகவினரை தனித்தனியாகச் சந்தித்து ஊக்குவித்தேன். அதை நினைவுகூரும் வகையில் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். அவர் ஒருவர் மட்டும் உழைத்தால் போதாது. ஒவ்வொருவரும் அவரைப்போல நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நமதே'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x