Published : 22 Mar 2022 07:59 AM
Last Updated : 22 Mar 2022 07:59 AM
சென்னை: டாஸ்மாக்கால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இனப் படுகொலை என்பது குண்டு போட்டு கொலை செய்வது மட்டுமல்ல; மது குடிக்கவைத்து கொலை செய்வதும் இனப் படுகொலைதான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் ‘பெண் எனும் பேராற்றல்’ என்ற தலைப்பில் 20-ம் தேதி கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் சீமான் பேசியதாவது: அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு என எல்லாவற்றிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துதான் போட்டியிடப் போகிறோம். அதிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவோம். தமிழ் தேசிய அரசியல் எழுச்சி பெற்று வரும் காலத்தில் பெண்களின் பங்களிப்பு பெரிதும் அவசியம். பெண்ணுக்கான உரிமையை பெண் பேசாமல் வேறு யார் பேசுவது. ஆட்சி அதிகாரத்தை கொடுத்துவிட்டால் தனக்கான உரிமையை தானே பேசிக்கொள்வார்கள். நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைத்தால் அமைச்சரவையிலும் பெண்களுக்கு சரிபாதி வாய்ப்பு வழங்கப்படும்.
டாஸ்மாக்கால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இனப் படுகொலை என்பது குண்டு போட்டு கொலை செய்வது மட்டுமல்ல; மது குடிக்கவைத்து கொலை செய்வதும் இனப் படுகொலைதான். டாஸ்மாக் மூலம் பொருளாதாரம் ஈட்டுவதை தவிர இவர்களிடம் வேறு எந்த திட்டமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி தலைமை தாங்கி பேசும்போது, “இந்த நிலத்தில் பெண்களின் பேராற்றலை வெளிக்கொண்டு வருபவர் சீமான். சமூகத்தில் பெண்கள் எப்படி வைக்கப்பட்டிருந்தனர் என்று நமக்கு தெரியும். நாமே முன்னர் எப்படி இருந்தோம் என்று நாம் அறிவோம். அரசியல் ஈடுபாடு மூலம் உலகைப் பற்றிய புரிதலும், தன்னம்பிக்கையும் வளர்ந்துள்ளது’’ என்றார்.
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுமித்ரா, ‘வீழ்ந்துபோக நாங்கள் விட்டில் பூச்சிகள் அல்ல’ என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். ‘தமிழ் தேசிய அரசியலில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஆன்டனி ஆஸ்லின் பேசினார்.
‘கூண்டை உடைப்போம், உலகை அளப்போம்’ என்ற தலைப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் அனிஸ் பாத்திமா உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகா, சீதாலட்சுமி, விஜயலட்சுமி, டாக்டர் இளவஞ்சி, சமூக செயற்பாட்டாளர் நாச்சியாள் சுகந்தி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT