Published : 22 Mar 2022 07:18 AM
Last Updated : 22 Mar 2022 07:18 AM

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தக் கோரி நடைப்பயணம் செல்ல முயன்ற 18 விவசாயிகள் கைது

திருவாலங்காட்டிலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள முயன்ற கரும்பு விவசாயிகளை போலீஸார் தடுத்து கைது செய்தனர்.

திருத்தணி: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று தமிழ்நாடு தலைமைச் செயலகம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள முயன்ற கரும்பு விவசாயிகள் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் செயல்படும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைதொடங்கப்பட்டு 38 ஆண்டுகளாகிவிட்டன. இதுவரை சுமார் 100 லட்சம் டன் கரும்பு அரவைச் செய்யப்பட்டுள்ளதால், ஆலையில் உள்ள இயந்திரங்களில் தேய்மானம் ஏற்பட்டுப் பழுதடைந்துள்ளன.

ஆகவே, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையைப் புனரமைத்து மேம்படுத்த வேண்டும் என, கரும்பு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆலையைப் புனரமைத்து, நாள் ஒன்றுக்கு5 ஆயிரம் டன் கரும்பு அரைவை மேற்கொள்ளும் வகையில் மேம்படுத்த வேண்டும். இணை மின் உற்பத்தி மற்றும் எத்தனால் உற்பத்தி நிலையங்கள் அமைக்க வேண்டும். வருவாய் பங்கீட்டுச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

வெட்டுக்கூலி பிரச்சினையை முறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை திருத்தணி கூட்டுறவுசர்க்கரை ஆலை அருகே இருந்து, தமிழக தலைமைச் செயலகம் நோக்கி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்சார்பில் விவசாயிகள் நடைப்பயணம் மேற்கொள்ள முயன்றனர். ஆனால், அவர்களுக்கு அனுமதியில்லை எனக் கூறி திருவாலங்காடு போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவிந்திரன், மாநிலச் செயலாளர் சி.பெருமாள், மாநிலக் குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன் உள்ளிட்ட 18 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x