

சுற்றுச்சூழலை பாதுகாக்க உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத் தில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழலி யல் இழப்பு தடுப்பு மற்றும் இழப்பீடு (லாஸ் ஆப் ஈகாலஜி) ஆணையத்தைக் கலைத்து உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அங்கு நிலுவையில் இருந்த 28 ஆயிரம் வழக்குகளை தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றியுள்ளது.
வேலூர் நகர்வாழ் குடியிருப் போர் நலச்சங்கத் தலைவர் முருகாண்டி, தோல் கழிவுகளால் குடிநீர் மற்றும் விவசாய நிலங்கள், சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கவும், சுத்தமான குடிநீர் வழங் கக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 1996-ல் தமிழகத்துக்கென பிரத்யேகமாக சுற்றுச்சூழலியல் இழப்பு தடுப்பு மற்றும் இழப்பீடு (லாஸ் ஆப் ஈகாலஜி) ஆணையத்தை அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி இந்த ஆணையம், கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத் தில் செயல்பட்டு வருகிறது. சுற் றுச்சூழலை மாசுபடுத்தியவர் களிடமிருந்து இழப்பீடு வசூலித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆணையத்துக்கு மத்திய அரசு காலநீட்டிப்பு வழங்கிவந்தது.
இந்நிலையில் கடந்த 2010-ல் தேசிய பசுமை தீர்ப்பாயம் உரு வாக்கப்பட்டதால், தமிழகத்தில் உள்ள சுற்றுச்சூழலியல் இழப்பு தடுப்பு ஆணையத்தைக் கலைத்து, அங்கு நிலுவையில் உள்ள வழக்குகளை பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்ற வேண் டும் என மத்திய அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. அதே நேரத் தில் இந்த ஆணையத்தை கலைப்பதற்குப் பதிலாக நிரந்தர மாக்க வேண்டும் என வேலூர் குடியிருப்போர் நலச்சங்கமும் வழக்கு தொடர்ந்தது. தங்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டு மென ஆணையத்தில் பணி புரிந்த ஊழியர்களும் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை ஒன்றாக விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிர மணியன், என்.கிருபாகரன் ஆகி யோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என்ற நிரந்தர அமைப்பு வந்த பிறகு, இடைக்காலமாக ஏற்படுத்தப்பட்ட சுற்றுச் சூழலியல் இழப்பு தடுப்பு ஆணையம் தேவையில்லை என்றே கருத வேண்டியுள்ளது. எனவே அந்த ஆணையத்தைக் கலைத்து உடனடியாக பசுமை தீர்ப்பாயத்துடன் இணைத்து உத்தரவிடுகிறோம். ஜூன் 30-ம் தேதி வரை இதற்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது அந்த ஆணையத்தில் நிலுவை யில் இருக்கும் 28 ஆயிரம் வழக்குகளும் பசுமை தீர்ப் பாயத்துக்கு மாற்றப்படுகிறது.
பசுமைத் தீர்ப்பாயத்துக்கென உள்ள கால வரையறையோ அல்லது நீதிமன்ற கட்டணமோ இந்த வழக்குகளுக்குப் பொருந் தாது. மாற்றப்படும் அனைத்து வழக்குகளையும் 6 மாதத்துக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கும் வகை யில் சென்னையில் கூடுதலாக ஒரு பசுமை தீர்ப்பாய அமர்வை மத்திய அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும். ஆணை யத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து ஊழியர்களையும் பசுமை தீர்ப்பாயத்துக்கு பணிமாறுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.