

கடன் பிரச்சினையில் காவல் துறையினர் கட்ட பஞ்சாயத்து செய்து மிரட்டுவதாக கூறி, தி.மலை ஆட்சியர் அலு வலக வளாகத்தில் நேற்று மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு பெண் ஒருவர் தற் கொலைக்கு முயன்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
தி.மலை கிரிவலப் பாதை குபேர நகரில் வசிப்பவர் தென்றல். இவர், திருவண் ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு நேற்று தற்கொலைக்கு முயன்றார். அவரது செயலை பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து, விசாரணை நடத்தினர்.
அப்போது காவல் துறையினரிடம் தென்றல் கூறும்போது, “கணவரை பிரிந்து தாய் மற்றும் பிள்ளைகளுடன் வசிக்கிறேன். ஊடரங்கு காலத்தில் இடுக்கு பிள்ளையார் கோயில் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரிடம் கடனாக ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளேன். பணத்தை திருப்பி கொடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் என் மீது திருவண்ணாமலை கிராமிய காவல்நிலையத்தில், அப்பெண் புகார் அளித்தார்.
அதன்பேரில், என்னை காவல் நிலையத்துக்கு வரவழைத்த காவல்துறையினர், ரூ.50 ஆயிரம் பெற்ற கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என கட்ட பஞ்சாயத்து செய்தனர். அவர் களிடம் ஏற்கெனவே ரூ.1.50 லட்சம் வரை கொடுத்துள்ளேன். மேலும் ரூ.50 ஆயிரம் கொடுத்து விடுகிறேன். அதற்கு மேலும் கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை என கூறிவிட்டேன்.
மேலும், இது தொடர்பாக, நீதிமன்றத்தில் சட்டப்படியான நடவடிக்கைக்கு உடன் படுகிறேன் என தெரிவித்தும், என்னுடைய வீட்டில் காவல்துறையினர் அடிக்கடி வந்து சோதனை என்ற பெயரில் மிரட்டிவிட்டு செல்கின்றனர். இதற்கு தீர்வு காண ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.