மதுரை | பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பஸ் கண்ணாடியை உடைத்த பள்ளி மாணவர்கள்

மாணவர்கள் கல்எறிந்ததால் கண்ணாடி உடைந்த நிலையில் அரசுப் பேருந்து.
மாணவர்கள் கல்எறிந்ததால் கண்ணாடி உடைந்த நிலையில் அரசுப் பேருந்து.
Updated on
1 min read

மதுரை: மதுரை அருகே மாணவர்கள் கைகாட்டியும் நிறுத்தாமல் சென்ற பஸ் மீது கல்லெறிந்ததால், அதன் கண்ணாடிகள் உடைந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.

மதுரை திருச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள யா.கொடிக்குளம் பாலம் பேருந்து நிறுத்தம் வழியாக காலை 8.45 மணிக்கு ஒரு மாநகர அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் நிறுத்தத்தில் மாணவர்கள் சிலர் பள்ளிக்கு செல்வதற்காக பஸ்ஸுக்காக நின்று கொண்டிருந்தனர். ஆனால், மாணவர்கள் சைகை காட்டியும் பஸ்ஸை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மாணவர்கள், கல்லை எடுத்து பஸ் மீது வீசினர். இதில், பஸ் கண்ணாடி உடைந்தது. உடனடியாக பஸ்ஸை டிரைவர் நிறுத்தினார். அதற்கு பஸ் மீது கல் வீசிய பள்ளி மாணவர்கள் தப்பியோடிவிட்டனர். தகவல் அறிந்த ஒத்தக்கடை போலீஸார், விரைந்து சென்று உடைந்த பஸ் கண்ணாடியை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். பஸ் கண்ணாடி உடைந்தது. எனினும், பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் சிறு காயம் கூட இல்லாமல் தப்பினர்.

மதுரையில் சமீப காலமாக இதுபோல், பஸ்கள் நிறுத்தாமல் செல்வதாகவும், ஆத்திரமடையும் மாணவர்கள் இதுபோல் பஸ் கண்ணாடியை உடைக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரோனா காலத்திற்கு முன் மதுரை மாநகர், புறநகர் பகுதியில் இயக்கப்பட்ட பஸ்கள் எண்ணிக்கையையும், தற்போது இயக்கப்படும் எண்ணிக்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கரோனாவுக்கு பிறகு ஒவ்வொரு வழித்தடங்களிலும் அரசு பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் மாணவர்கள், முன்போல் பஸ்களில் பயணம் செய்ய முடியவில்லை. சரியான நேரத்திற்கு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியவில்லை.

பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும்போது டிரைவர்களும் பஸ்களில் அதற்கு மேல் பயணிகளை ஏற்ற முடியவில்லை. நிறுத்தி மாணவர்களை ஏற்றினால் அவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியப்படி செல்வதால் அவர்கள் கீழே விழவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், டிரைவர்கள் சில நேரங்களில் பஸ்களை நிறுத்தாமல் சென்று விடுகின்றனர். அதனால், மாநகர், புறநகர் பகுதியில் வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்கவும், பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து துறை, கல்வித்துறை கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in