

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட உள்ளாட்சி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (மார்ச் 21) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த பல மாதங்களாக ஊதியம், ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்குரிய பணப் பலன்கள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளன.
எனவே, பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கி அரசே நேரடியாக உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நடப்பு 2021-22 பட்ஜெட்டில் காரைக்கால் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுமையும் வழங்காமல் இழுத்தடிக்கும் உள்ளாட்சி துறையை கண்டித்தும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பெடுத்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி, காரைக்காலில் உள்ள உள்ளாட்சித்துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பு இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கூட்டுப் போராட்டக்குழு அமைப்பாளர் அய்யப்பன் தலைமை வகித்தார், காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் மற்று நிர்வாகிகள், உள்ளாட்சி ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.