

சென்னை: மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையை எந்த நிலையிலும் தமிழக அரசு தடுக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரைவயில் இன்று (மார்ச் 21) தனித் தீர்மானம் ஒன்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனால் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சி ஆதரவுடன், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “மேகதாது விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கையை திமுக அரசு எடுக்கும். எந்த நிலையிலும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழக அரசு தடுக்கும். மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.
தமிழ்நாட்டின் காவிரி உரிமையை, உழவர் நலனை இந்த அரசு நிச்சயம் பாதுகாக்கும். மேகதாது விவகாரத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வெல்வோம்” என்று தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பான தீர்மானத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: நீர்வளத் துறை அமைச்சர் மேகதாது சம்பந்தமாக ஒரு தீர்மானத்தை, அரசின் தனித் தீர்மானமாகக் கொண்டுவந்து, அவரே முன்னுரையாக வரலாற்றிலே பதிவாகியிருக்கக்கூடிய பல்வேறு செய்திகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, கட்சி பேதமின்றி, அரசியல் பேதமின்றி இந்தத் தீர்மானத்தை நாம் ஏகமனதாக நிறைவேற்றிட வேண்டுமென்ற அந்த அடிப்படையிலே, ஒரு தீர்மானத்தை அவர் முன்மொழிந்திருக்கிறார்.
அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்ததற்குப் பிறகு, அதைத் தொடர்ந்து உரையாற்றியிருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று, இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிட, இந்த அரசுக்கு ஆதரவு தந்தமைக்கு முதலில் உங்கள் அத்தனை பேருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி தருவதை நிச்சயம் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
நடுவர் மன்றத் தீர்ப்பிற்கும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பிற்கும் எதிராக கர்நாடக அரசு மேற்கொள்ளத் துடிக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு நிச்சயம் தடுக்கும். அணைக்கு அனுமதி அளிக்க கூடாது என மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும், சட்டரீதியான நடவடிக்கைகளிலும் இந்த அரசு நிச்சயமாக உறுதியாக இருக்கும். அதிலே எந்தவித பாகுபாடும் பார்க்கமாட்டோம்.
அணை கட்டக்கூடிய முயற்சிகளை இந்த அரசு எல்லா வடிவிலும் எதிர்க்கும். தமிழகத்தின் காவிரி உரிமையை, தமிழக உழவர்களின் நலனை இந்த அரசு நிச்சயம் பாதுகாக்கும். தமிழ்நாட்டு உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம். நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அவர் கூறியுள்ளார்.